மகளிருக்கு எதிரான அராஜகம் தொடர்ந்தால் போராட்டம்: விஜய்

சென்னை: 'மகளிருக்கு எதிரான அராஜக நிலை தொடர்ந்தால், மக்கள் போராட்டத்தை முன்னெடுக்க தயங்க மாட்டோம்' என, த.வெ.க., தலைவர் விஜய் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:

வியாசர்பாடி முல்லைநகரில், நேற்று முன்தினம் ஏற்பட்ட தீவிபத்தில் பாதிக்கப்பட்ட மக்கள், தற்காலிகமாக அருகில் உள்ள பள்ளியில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

அங்கு, த.வெ.க.,வினர் சென்று, மனிதநேய அடிப்படையில், அத்தியாவசிய பொருட்களையும், உணவும் வழங்கினர்.

இதை பார்த்த போலீசார், எங்கள் கட்சி நிர்வாகிகளை தடுத்து நிறுத்தி, வெளியேறும்படி மிரட்டியுள்ளனர்.

உதவி செய்வதை ஏன் தடுக்கிறீர்கள் என, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கங்காவதி,45, கேள்வி எழுப்பியுள்ளார்.

அப்போது போலீசார், ஈவு, இரக்கமின்றி கங்காவதியின் வயிற்றில் எட்டி உதைத்து, கீழே தள்ளியுள்ளனர். தடுக்க சென்ற மகளிர் அணியை சேர்ந்த தமிழ்செல்வியின் ஆடையை, போலீசார் பிடித்து இழுத்து தள்ளிவிட்டுள்ளனர். காயமடைந்த கட்சியினர், ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நிர்கதியாக நிற்கும் மக்களுக்கு உதவுவது மாபெரும் குற்றச்செயலா; காவல்துறையின் செயலை முதல்வர் ஸ்டாலின் ஏற்றுக்கொள்கிறாரா?.

தமிழகத்தில் நடப்பது மக்களாட்சி அல்ல; அதிகார திமிர் பிடித்த பாசிச ஆட்சி என்பதற்கு இதைவிட சாட்சி தேவையில்லை.

காவல்துறை வாயிலாக அராஜகத்தை கட்டவிழ்த்துவிடும் போக்கை ஒருபோதும் ஏற்க முடியாது.

மகளிருக்கு எதிரான அராஜக நிலை தொடர்ந்தால், த.வெ.க., சார்பில் மிகப்பெரிய மக்கள் போராட்டத்தை முன்னெடுக்க தயங்கமாட்டோம்.

இவ்வாறு விஜய் கூறியுள்ளார்.

***

Advertisement