மூடிய சர்க்கரை ஆலைகளை திறக்கக்கோரி ஆர்ப்பாட்டம்

சென்னை:இழுத்து மூடப்பட்டுள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலைகளை திறக்க வலியுறுத்தி, தமிழக கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில், சென்னையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில், கரும்புடன் ஏராளமான விவசாயிகள் பேரணியாக வந்து பங்கேற்றனர். தமிழக கரும்பு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலர் ரவீந்திரன் பேசியதாவது:

தமிழகத்தில் கரும்பு சாகுபடி பரப்பு குறைந்து வருகிறது. 2012ல் 24 லட்சம் டன்னாக இருந்த சர்க்கரை உற்பத்தி, 7 லட்சம் டன்னாக குறைந்துள்ளது.

தி.மு.க., அரசு சட்ட சபை தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், அக்.,1 முதல் டன்னுக்கு 4,000 ரூபாய், கரும்பு கொள்முதல் விலையாக வழங்க வேண்டும்.

மதுரை அலங்காநல்லுார் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை, திருப்பூர் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை, என்.பி.கே.ஆர்., கூட்டுறவு சர்க்கரை ஆலை, ஆம்பூர் சர்க்கரை ஆலை போன்றவை மூடப்பட்டு உள்ளன.

மத்திய அரசிடம் உதவி பெற்று, மூடப்பட்ட ஆலைகளை மீண்டும் திறக்க வேண்டும். தனியார் சர்க்கரை ஆலைகளிடம் கரும்பு நிலுவைத் தொகையை அரசு வசூலித்து தர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement