துாய்மை பணியாளர்கள் பற்றாக்குறையால் தேங்கும் குப்பை மாமன்ற கூட்டத்தில் தி.மு.க., கவுன்சிலர் குற்றச்சாட்டு

ஆவடி, மே 28-

ஆவடி மாநகராட்சி மாமன்ற கூட்டம், மேயர் ஜி.உதயகுமார் தலைமையில், நேற்று காலை நடந்தது. மாநகராட்சி கமிஷனர் கந்தசாமி மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், வணிக நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் கணக்கெடுக்கும் பணி, பள்ளிகளில் விளையாட்டு உபகரணங்கள் அமைத்தல், அங்கன்வாடிகளில் சிமென்ட் கற்கள் பதித்தல், ஆழ்துளை கிணறு அமைத்தல், மழை நீர், சிறு பாலம் அமைத்தல், நீர்த்தேக்கத் தொட்டி பராமரிப்பு உள்ளிட்ட பணிகள் தொடர்பாக 93 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து நடந்த விவாதங்களில் கவுன்சிலர்கள் பேசியதாவது:

ரவி 40வது வார்டு தி.மு.க., கவுன்சிலர்:

மெட்ரோ குடிநீர் திட்டம் துவங்கி ஓராண்டு ஆகிறது. இது வரை எங்கள் வார்டில் குடிநீர் வினியோகம் செய்யவில்லை. மெட்ரோ குடிநீர் சோதனையின் போது, பல இடங்களில் குழாய் உடைந்து நீர் கசிவு ஏற்படுகிறது. எனவே, நிபுணர்களை வரவழைத்து பிரச்னை சரி செய்து குடிநீர் வழங்க வேண்டும்.

கார்த்திக் காமேஷ், 48வது வார்டு ம.தி.மு.க., கவுன்சிலர்:

கோவர்த்தனகிரி பிரதான சாலை, ஸ்ரீனிவாசா நகர் சாலைகள் மோசமாக உள்ளன. அதை சீரமைக்க வேண்டும். அங்குள்ள சுடுகாட்டிற்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும். அங்கு, உப்பு தண்ணீர் பிரச்னையை தீர்க்க, மெட்ரோ குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்.

யாஸ்மின் பேகம், 36 வது வார்டு தி.மு.க., கவுன்சிலர்:

குப்பை அள்ளும் பேட்டரி வண்டி பழுதாகி உள்ளது. அதற்கு மாற்று ஏற்பாடு செய்யாததால், குப்பை எடுப்பதில் தாமதம் ஏற்படுகிறது. மழைநீர் வடிகால், பாதாள சாக்கடை இதுவரை துார் வாரப்படவில்லை. ஒப்பந்ததாரர்கள் அப்பணிக்கு ஆட்களை நியமிப்பதில்லை. எங்கள் பதவி காலம் முடிய போகிறது. ஆனால், இதுவரை துார்வாரவில்லை.

40 முறை திருட்டு

மேகலா ஸ்ரீனிவாசன், 38வது வார்டு காங்., கவுன்சிலர்:

விளிஞ்சியம்பாக்கம் ஏரிக்கரை அருகே, ஆழ்துளை கிணற்றில் பொருத்தப்பட்ட மின் மோட்டார் வடம் அடிக்கடி திருடு போகிறது. மூன்று ஆண்டுகளில், 40 முறை திருடு போயுள்ளது. இதனால் குடிநீர் வினியோகம் பாதிக்கப்படுகிறது. இதை தடுக்க 'சிசிடிவி' கேமரா அமைத்து கண்காணிக்க வேண்டும்.

சக்திவேல், 8வது வார்டு தி.மு.க., கவுன்சிலர்:

குளக்கரை சாலையில், சாலையோர ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை வேண்டும். குப்பை அள்ள போதுமான துாய்மை பணியாளர்கள் இல்லை. ஒவ்வொரு வண்டியிலும் இருவர் மட்டுமே உள்ளனர். இதனால், சாலைகளில் மூட்டை மூட்டையாக குப்பை தேங்கி உள்ளது.

ஜான், 10வது வார்டு மா.கம்யூ., கவுன்சிலர்:

ஜாக் நகரில், மெட்ரோ, பாதாள சாக்கடை பணிகள் ஒரே நேரத்தில் நடக்கின்றன. மெட்ரோ குடிநீர் சோதனையின்போது, நீர்க்கசிவு ஏற்படுகிறது. அதில் வெளியேறும் குடிநீர், பாதாள சாக்கடை குழியில் தேங்கி நிற்பதால், சாலை வலுவிழந்து ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டுள்ளது.

பிரகாஷ், 1வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர்:

பிரதான சாலைகளில் உள்ள எல்.இ.டி., விளக்குகள், போதிய வெளிச்சம் இல்லாததால், அப்பகுதி இருள் சூழ்ந்து காட்சியளிக்கிறது. இதை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஒவ்வொரு கூட்டத்திலும் பேசுகிறேன். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.

அப்போது, குறிக்கிட்டு பேசிய 42வது வார்டு கவுன்சிலர் ராஜேந்திரன்:

பட்டாபிராம் முதல் திருமுல்லைவாயில் வரை சி.டி.ஹெச்., சாலையில் உள்ள சென்டர் மீடியன் மின் விளக்குகள் சரியாக எரியவில்லை. பலமுறை புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கவுன்சிலர்கள் தெரிவித்த கருத்துகள் குறித்து, அதிகாரிகளிடம் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என, கமிஷனர் கந்தசாமி தெரிவித்தார்.

Advertisement