மூத்த நடிகர்கள் குறித்து விமர்சனம் கைதான காமெடி நடிகருக்கு தடை

பெங்களூரு : பாலியல் பலாத்கார வழக்கில் சிறையில் உள்ள மதேனுார் மனு, மூத்த நடிகர்கள் குறித்து அவதுாறாக பேசிய ஆடியோ வெளியானதால், அவர் சின்னத்திரை, வெள்ளித்திரையில் நடிக்க, கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தடை விதித்து உள்ளது.
'காமெடி கில்லாடிகள்' நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் மதேனுார் மனு. நிகழ்ச்சியில் இவருடன் நடித்து வந்த நடிகையுடன் பழக்கம் ஏற்பட்டது. திருமணம் செய்து கொள்வதாக நம்ப வைத்து, அவரை பாலியல் பலாத்காரம் செய்தார்.
இரண்டு முறை கர்ப்பமாகி, கருக்கலைப்பு செய்தார் என்று அன்னபூர்னேஸ்வரி நகர போலீசில், அந்நடிகை புகார் அளித்திருந்தார்.
இதனால் தலைமறைவாக இருந்த மதேனுார் மனு, ஹாசனில் கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், மதேனுார் மனு பேசும் வீடியோ, சமூக வலைதளங்களில் பரவியது. அதில், மூத்த நடிகர்கள் சிவராஜ் குமார், தர்ஷன், துருவா சர்ஜா குறித்து ஆட்சேபனைக்குரிய வகையில் பேசி உள்ளார்.
இதனால் கோபமடைந்த சிவராஜ் குமார் ரசிகர்கள், கர்நாடக திரைப்பட வர்த்தக சபையில் புகார் அளித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
வர்த்தக சபை தலைவர் நரசிம்மலு அளித்த பேட்டி:
இப்புகார் தொடர்பாக, அனைத்து திரைப்படம், சின்னத்திரை அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தினோம். அவர் மிகவும் திமிராக பேசியுள்ளார். இதன் பின்னணியில், அவருக்கு, வெள்ளித்திரை, சின்னத்திரையில் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
சிறையில் இருக்கும் அவருக்கு, கன்னட திரையுலக சங்கங்கள் உதவ முன்வரவில்லை. இத்தகைய எண்ணம் கொண்டவருக்கு எதிராக புகார் அளிக்க முடிவு செய்து உள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.