பிரதமர் சூரிய மின் ஒளி திட்டத்தை செயல்படுத்தினால்... வருமானம்; இலவச மின்சாரத்துடன் மாதம் ரூ.1,000 ஈட்டலாம்

புதுச்சேரி: வீடுகளில், பிரதமர் சூரிய ஒளி மின்சார திட்டத்தை செயல்படுத்தும் மூலதனத்தை 5 ஆண்டில் ஈடு செய்து, அடுத்த 20 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1,000 முதல் வருவாய் ஈட்டலாம்.
இன்றைய விஞ்ஞான உலகில் மின்சாரம் அத்தியாவசிய தேவையாகிவிட்டது. இதன் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப மின் உற்பத்தியை பெருக்க அனல் மின் நிலையங்களில் நிலக்கரி உள்ளிட்ட எரிபொருளை எரிப்பதாலும், அணு மின்நிலையங்களில் அணுவை பிளப்பதாலும் சுற்றுச் சூழல் மாசு ஏற்படுகிறது.
இதனை தவிர்த்திட, ஆண்டு முழுவதும் கிடைக்கும் சூரிய ஒளியை பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பதில் மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக பிரதமர் மோடி, ஒரு கோடி வீடுகளுக்கு மாதம் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் வகையில் ரூ.75 ஆயிரம் கோடி முதலீட்டில் பிரதமர் சூரிய ஒளி மின் திட்டத்தை துவக்கி வைத்தார்.
இத்திட்டத்தில் வீடுகளில் சோலார் பேனல் அமைக்க மத்திய அரசு மானியம் வழங்குகிறது. ஒரு கிலோ வாட் மின் உற்பத்தி திறன் கொண்ட சோலார் பேனல் அமைக்க ரூ.30 ஆயிரமும், 2 கிலோ வாட் மின் உற்பத்தி திறனுக்கு ரூ.60 ஆயிரமும், 3 கிலோ வாட் திறனுக்கு மொத்தம் ரூ.78 ஆயிரம் மானியம் வழங்குகிறது. மேலும், இந்த சூரிய மின் சக்தி திட்டம் அமைக்க தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் 6.5 சதவீத வட்டியில் கடனுதவி வழங்குகிறது.
இத்திட்டங்களை பயன்படுத்திய வீடுகளில் சோலார் பேனல் அமைத்தால், அதனுடைய செலவுத் தொகையை 5 ஆண்டுகளில் எடுத்துவிடலாம். 6ம் ஆண்டு முதல் மின்சாரம் முற்றிலும் இலவசம். மேலும், உபரி மின்சாரத்தை மாதத்திற்கு ரூ.1,000 முதல் ரூ.2,500 வரை வருவாய் ஈட்டலாம்.
வீட்டில் 3 கிலோ வாட் திறனுக்கு சோலார் பேனல் அமைக்க மொத்தம் ரூ.2 லட்சம் செலவாகும். இதற்கு அரசு மானியம் ரூ.78 ஆயிரம் கிடைக்கும். மீதம் ரூ.1.22 லட்சம் நமது முதலீடு ஆகும். சோலார் பேனல் மூலம் மாதத்திற்கு 450 யூனிட் மின்சாரம் கிடைக்கும். அதில் நடுத்தர (ஒரு ஏ.சி., வாஷிங் மிஷின், 2 மின்விசிறி, 5 டியூப் லைட், ஒரு மோட்டார்) வீட்டில் சராசரியாக 300 யூனிட் மின்சாரம் செலவாகும். இதற்கான மின்கட்டணம் ரூ.1,270. மேலும், நாம் பயன்படுத்தாமல் உள்ள 150 யூனிட் மின்சாரத்தை, மின்துறைக்கு வழங்குவதன் மூலம், ரூ.866 நமக்கு மின்துறை (ஆண்டிற்கு ஒருமுறை கணக்கிட்டு) வழங்கும். இவ்வாறு மாதம் ரூ.2,136 வீதம் ஆண்டிற்கு 25 ஆயிரத்து 632 ரூபாய் செலவு மிச்சமாகும்.
இதன் மூலம், சோலார் பேனல் அமைக்க நாம் செலவிட்ட ரூ.1.22 லட்சம் 5 ஆண்டில் கிடைத்துவிடும், அதன்பின்பு, மாதத்திற்கு 300 யூனிட் மின்சாரம் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், உபரி மின்சாரம் 150 யூனிட் ரூ.866 வீதம் ஆண்டிற்கு 10 ஆயிரத்து 329 ரூபாய் மின்துறை நமக்கு வழங்கும்.
மேலும், நாம் மின் கட்டணத்திற்கு, 10 சதவீதம் சப் சார்ஜ் செலுத்துகிறோம். நாம் சோலார் பேனர் அமைத்து 300 யூனிட் இலவசமாக பயன்படுத்துவதன் மூலம் சப் சார்ஜ் ரூ.127 நமக்கு மிச்சம். மேலும், ஆண்டிற்கு ஒரு முறை மின்கட்டணம் உயர்த்தப்படுகிறது. இதனை கணக்கிட்டால், ஒவ்வொரு ஆண்டும் சோலார் பேனல் மூலம் வருவாய் அதிகரிக்கும் என்பது நிதர்சனம்.
சோலார் பேனல் அமைப்பதன் மூலம், சமூகத்தின் சுற்றுச் சூழலை மாசுபடுவதை தடுப்பதில் நாமும் ஒரு அங்கம் என்ற பெருமை கொள்வோம். மேலும், நாம் மின்சாரத்தை உற்பத்தி செய்வதன் மூலம், மின்துறைக்கு ஏற்படும் மின் இழப்பு தடுப்பதுடன், மின்துறைக்கு ஏற்படும் கூடுதல் செலவினங்கள் முற்றிலும் தவிர்க்கலாம்.
அப்புறம் என்னங்க.. நீங்களும் சீக்கிரமாக பிரதமரின் சூரிய ஒளி திட்டத்திற்கு மாறுங்க.. மாத பட்ஜெட்டை சேமிங்க..... கூடுதல் விபரங்களுக்கு 94890-80373, 94890-80374 மற்றும் ee2ped.py.gov.in என்ற இமெயில் தொடர்பு கொள்ளலாம்.
இதுவே மாதம் 750 யூனிட் மின்சாரத்தை பயன்படுத்தினால் மின்கட்டணம் ரூ.4,645 செலுத்த வேண்டும். அதுவே, 3 கிலோ வாட் சோலார் பேனல் அமைத்தால், அதன் மூலம் கிடைக்கும் 450 யூனிட் மின்சாரத்திற்கு போக மீதமுள்ள 300 யூனிட்டிற்கு ரூ.1,270 மட்டுமே செலுத்த வேண்டும். மாதம் ரூ.3,375 வீதம் ஆண்டிற்கு 40 ஆயிரத்து 50 மிச்சம். இதன் மூலம், சோலார் பேனல் அமைப்பதற்கான நமது மூலதனம் மூன்றே ஆண்டில் திரும்ப கிடைத்துவிடும். நான்காம் ஆண்டு முதல் ஆண்டிற்கு ரூ.40 ஆயிரத்து 50 வீதம் அடுத்த 22 ஆண்டுகளுக்கு செலவு மிச்சம்.
இலவச மின்சார திட்டத்தின்கீழ் மானியம் பெற்று தங்கள் வீடுகளின் மேற்கூரையில் சூரிய மின்சக்தி தகடுகளை பொருத்த விரும்புவோர் https://pmsuryaghar.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். மாநிலம், மாவட்டத்தை தேர்வு செய்து, மின் நுகர்வு எண், மொபைல் எண், இ-மெயில் முகவரியை பதிவு செய்ய வேண்டும். ஒப்புதல் கிடைத்ததும் வீடுகளில் சூரியமின்சக்தி தகடு பொருத்த நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

மேலும்
-
மந்தாரக்குப்பத்தில் நவீன வசதிகளுடன் விளையாட்டு பூங்கா அமைக்கப்படுமா?
-
பேத்தி மாயம் தாத்தா புகார்
-
விருதை நகராட்சி அலுவலகம் முன் மா. கம்யூ., மனு அளிப்பு போராட்டம்
-
குறிஞ்சிப்பாடி பகுதியில் கலெக்டர் ஆய்வு
-
டாஸ்மாக் மது விற்ற பெண் கைது
-
மாவட்டத்தில் மானியத்துன் கடனுதவி பெற புதிய தொழில்முனைவோர் விண்ணப்பிக்கலாம்