கெங்கச்சியம்மன் கோவில் மண்டல அபிஷேகம் நிறைவு

சூணாம்பேடு:செங்கல்பட்டு மாவட்டம், சூணாம்பேடு கிராமத்திலுள்ள கெங்கச்சியம்மன் கோவிலில், 48ம் நாள் மண்டல அபிஷேக விழா, நேற்று நிறைவடைந்தது.

சூணாம்பேடு பஜார் பகுதியில், பழமையான கெங்கச்சியம்மன் திருக்கோவில் உள்ளது.

இந்த கோவிலில், 90 லட்சம் ரூபாயில், கடந்த மூன்று ஆண்டுகளாக திருப்பணி மேற்கொள்ளப்பட்டது.

பின் கடந்த ஏப்., 9ம் தேதி, கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

அதைத் தொடர்ந்து, 47 நாட்கள் மண்டல அபிஷேகம் நடந்து வந்தது.

48ம் நாள் மண்டல அபிஷேக நிறைவு விழா, நேற்று நடந்தது.

கோவிலில் இருந்து 108 பக்தர்கள் பால்குடம் எடுத்து, கிராமத்தின் முக்கிய வீதிகளில் உலா வந்து, அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது.

இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.

இன்று மாலை 6:00 மணிக்கு, கோவில் வளாகத்தில் தீமிதி திருவிழா நடக்க உள்ளது.

Advertisement