வன்னியம்பட்டி -- சத்திரப்பட்டி ரோட்டில் வேகத்தடைகள்

ஸ்ரீவில்லிபுத்துார்: -ஸ்ரீவில்லிபுத்துாரிலிருந்து வன்னியம்பட்டி வழியாக சத்திரப்பட்டி செல்லும் ரோட்டில் பல இடங்களில் வேகத்தடைகள் மிகவும் உயரமாக இருப்பதால் விபத்து சமயங்களில் ஆம்புலன்ஸ்கள் விரைந்து செல்ல முடியாத நிலை காணப்படுகிறது.

இந்த வழித்தடத்தில் வன்னியம்பட்டி ரயில்வே கேட்டை கடந்து மொட்ட மலை வரை ஏராளமான வீடுகள், கடைகள், பள்ளிகள், கல்லூரிகள் உள்ளது.

ரோட்டில் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் எதிரும், புதிருமாக இரு வாகனங்கள் வரும்போது போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.

தற்போது இந்த ரோட்டின் வழியாக சத்திரப்பட்டி, ராஜபாளையம் பகுதி மில்களுக்கு அதிகளவில் கனரக வாகனங்கள் சென்று வருகின்றது.

இதனால் குடியிருப்பு பகுதியில் விபத்தை தடுக்க வசதியாக பல இடங்களில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த வேகத்தடைகள் அதிக உயரமாக இருப்பதால் விபத்து சமயங்களில் 108 ஆம்புலன்ஸ்களில் பாதிக்கப்பட்டவரை ஏற்றி வரும்போது உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு செல்ல முடியாத நிலை காணப்படுகிறது.

எனவே, ரோட்டின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை முழு அளவில் அகற்றியும் வேகத்தடைகளின் உயரத்தை குறைத்து, நீளத்தை அதிகரித்து ஆம்புலன்ஸ்கள் எளிதில் வந்து செல்லும் நிலையை ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement