குடிநீர் பிரச்னை, பள்ளமான ரோடுகள் சிரமத்தில் விருதுநகர் லெட்சுமி நகர் குடியிருப்போர்

விருதுநகர் : விருதுநகர் லெட்சுமிநகரில் குடிநீர் பிரச்னை, தெருநாய்கள் தொல்லை, மேடு, பள்ளம் நிறைந்த ரோடுகளால் விபத்து அச்சம், நுழைவு பகுதிகளில் அணிவகுக்கும் ஆம்னி பஸ்களால் சிரமம் என அப்பகுதி குடியிருப்போர் தவிக்கின்றனர்.

விருதுநகர் லெட்சுமி நகர் குடியிருப்போர் முனியாண்டி, பொன்னுச்சாமி, உதயக்குமார், லட்சுமணன், காதர், ராஜகோபால் ஆகியோர் கூறியதாவது:

விருதுநகர் லெட்சுமி நகரில் பல ஆண்டுகளாக அடிப்படை வசதி குறைபாடுகள் உள்ளன.

எங்கள் பகுதியில் குடிநீர் பிரச்னை உள்ளது. ஏற்கனவே போட்ட ராஜிவ் காந்தி குடிநீர் திட்டத்திலே குழாய்களை பதித்து விட்டு ஜல் ஜீவன் திட்டம் என்கின்றனர். குறுகிய கால இடைவெளியில் குடிநீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

லெட்சுமி நகர் குடியிருப்புக்குள் நாய்த்தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மேலும் இங்கு மற்றொரு முக்கிய பிரச்னையாக இருப்பது வாறுகால் பிரச்னை. வாறுகால்கள் இல்லாததால் வீட்டின் அருகிலும், தெருவிலும் கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகின்றன.

மேலும் மக்களே அமைத்த உறிஞ்சிக்குழிகள் நிலத்தடி நீரை பாதிப்படையவும் செய்கின்றன. ஒரு சில தெருக்களுக்கு மட்டுமே இப்போது ரோடு வசதி வந்துள்ளது. பெருவாரியான பகுதிகள் குண்டும் குழியுமாக மேடு பள்ளமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்தை சந்திக்கின்றனர்.

வ.உ.சி., தெருவில் 30 ஆண்டுகளுக்கு மேலாக ரோடு வசதி இல்லை. இதே போல் இப்பகுதி நான்கு வழிச்சாலையை ஒட்டி இருப்பதால் வெளியூர்களில் படிக்கும் மாணவர்கள், பணிபுரிவோர் மாலை, இரவு வேளைகளில் இதன் நுழைவுப்பகுதிகளில் நிற்கும் ஆம்னி பஸ்களில் செல்கின்றனர். இந்த ஆம்னி பஸ்கள் அணிவகுத்து நின்றால் குடியிருப்போர் யாரும் அவசரத்திற்கு வெளியே செல்ல முடியாது.

குடியிருப்பு பகுதியில் சி.சி.டி.வி., கேமராக்கள் வைத்துள்ளதால் திருட்டு குறைந்துள்ளது. இருப்பினும் எங்கள் பகுதியில் ஒரு அவுட்போஸ்ட் தேவையாக உள்ளது.

இன்னும் பாதுகாப்பாக இருக்கும். நமக்கு நாமே திட்டத்தில் போட்ட பாதாளசாக்கடை திட்டத்தில் ரோடு தோண்டப்பட்டு சரியாக பதிக்கப்படவில்லை.

குப்பை சரியாக அகற்றப்படாததால் நீர்வரத்து ஓடையில் குப்பை கொட்டப்படுவது வாடிக்கையாகி உள்ளது. இதனால் நீர்வரத்து பாதை பாதிப்பை சந்திக்கிறது.

தற்போது சிறப்பு அலுவலர் காலகட்டம் என்பதால் குப்பை அகற்றப்படுவதே கிடையாது. பூங்கா, நுாலக வசதி ஏற்படுத்தினால் பயனுள்ளதாக இருக்கும், என்றனர்.

Advertisement