ரெய்டில் சிக்கிய 1,700 கருக்கலைப்பு கிட்கள்: ஹரியானா அதிகாரிகள் நடவடிக்கை

1

சண்டிகர்: ஹரியானா மாநிலம் முழுவதும் போலீஸ் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் 1,700-க்கும் அதிகமான கருக்கலைப்பு கிட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஹாியானா மாநிலத்தில் கடந்த வாரம் மாநில அளவில் சட்ட விரோத விற்பனையை தடுக்க, சுகாதார துறையினர் ஆய்வு நடத்தினர். இதில் 1,787 மருத்துவ கருக்கலைப்பு கருவிகளை பறிமுதல் செய்துள்ளனர், மேலும் இது தொடர்பாக 6 எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டுள்ளது.

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுதிர் ராஜ்பால் தலைமையில் நடைபெற்ற பாலின விகிதத்தை மேம்படுத்துவதற்கான மாநில பணிக்குழுவின் வாராந்திர கூட்டம் நடைபெற்றது.

இதில் கடந்த மே 20 முதல் 26 வரையிலான வாரத்தில், மாநிலம் முழுவதும் ஆய்வுகள் நடத்தப்பட்டதாகவும், 1,787 கருக்கலைப்பு கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், ஆறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கூடுதலாக, சட்டவிரோத நடைமுறைகளுக்காக மூன்று கடைகள் சீல் வைக்கப்பட்டன. கருக்கலைப்பு கருவிகளுக்கு அதிக கட்டணம் வசூலித்ததாக மூன்று வழக்குகள் கண்டறியப்பட்டன, மேலும் விதிகளை மீறியதற்காக 1945 ஆம் ஆண்டு மருந்து மற்றும் அழகுசாதனப் பொருட்கள் விதிகளின் கீழ் இரண்டு நிறுவனங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.


அதனை தொடர்ந்து சட்டவிரோத கருக்கலைப்பு நடைமுறைகளுக்கு எதிரான அமலாக்கத்தை தீவிரப்படுத்தவும், அத்தகைய மீறல்களில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்ட மருத்துவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும், அவர்களின் உரிமங்களை ரத்து செய்வது உட்பட, ராஜ்பால் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Advertisement