51வது மாகாணமாக இணைய வேண்டும்: கனடாவை மீண்டும் வம்புக்கு இழுக்கிறார் டிரம்ப்

15


வாஷிங்டன்: கனடா அமெரிக்காவுடன் 51வது மாகாணமாக இணைய வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் கூறியுள்ளார்.


டிரம்ப், தனது 2024 தேர்தல் பிரசாரம் செய்த போது கனடா அமெரிக்காவுடன் இணைய வேண்டும் என்று தெரிவித்தார். ஆனால் அதை கனடா நாட்டு அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் ஏற்றுக்கொள்ளவில்லை. டிரம்ப் கருத்து தொடர்பாக கனடா அரசு தரப்பிலும் கடும் கண்டனமும் அதிருப்தியும் தெரிவிக்கப்பட்டது.


ஆனாலும் தன் முயற்சியை கைவிடாத அதிபர் டிரம்ப் தொடர்ந்து கனடாவை இணைப்பது பற்றி பேசி வருகிறார். இது தொடர்பாக ட்ரூத் சோஷியல் பதிவில் டிரம்ப் கூறியிருப்பதாவது: எங்களது அற்புதமான கோல்டன் டோம் அமைப்பின் ஒரு பகுதியாக இருக்க விரும்பும் கனடாவிடம், நீங்கள் தனி நாடாக இருக்க விரும்பினால் 61 பில்லியன் டாலர்கள் செலவாகும்.


ஆனால் நீங்கள் எங்கள் நேசத்துக்குரிய 51வது மாகாணமாக மாறினால் ஜீரோ டாலர்கள் செலவாகும் என்று நான் சொன்னேன். கனடா இன்னும் அதிகாரப்பூர்வமாக மாகாண அந்தஸ்து கோரிக்கைக்கு பதிலளிக்கவில்லை. இவ்வாறு டிரம்ப் அந்த பதிவில் கூறியுள்ளார்.

Advertisement