இந்தியா-தாய்லாந்து மோதல் * நட்பு கால்பந்தில்...

பதும் தானி: நட்பு கால்பந்தில் இன்று இந்தியா, தாய்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஆசிய கோப்பை கால்பந்து தொடர் 2027ல் சவுதி அரேபியாவில் நடக்க உள்ளது. இதற்கான மூன்றாவது கட்ட தகுதிச்சுற்றில் 24 அணிகள் (6 பிரிவு) பங்கேற்கின்றன. உலகத் தரவரிசையில் 127 வது இடத்திலுள்ள இந்திய அணி 'சி' பிரிவில் ஹாங்காங், சிங்கப்பூர், வங்கதேசம் அணிகளுடன் இடம் பெற்றுள்ளது.
வங்கதேசத்திற்கு எதிரான முதல் போட்டி கோல் எதுவுமின்றி 'டிரா' ஆனது. இந்திய அணி தனது அடுத்த போட்டியில் ஜூன் 10ல் ஹாங்காங்கை சந்திக்க உள்ளது. இதற்கு தயாராகும் வகையில் இன்று இந்திய அணி, 99 வது இடத்திலுள்ள தாய்லாந்துடன் நட்பு போட்டியில் பங்கேற்கிறது. தாய்லாந்தின் தம்மசாட் மைதானத்தில் இப்போட்டி நடக்கிறது.
கடந்த 1962ல் ஆசிய விளையாட்டில் இரு அணிகள் முதன் முறையாக மோதின. இந்தியா 4-1 என வென்றது. மொத்தம் நடந்த 26 மோதலில் இந்தியா 7ல் வென்றது. 7 'டிரா' ஆக, 12ல் தாய்லாந்து வென்றது. கடைசியாக 2019ல் இரு முறை மோதின. இதில் இந்தியா 4-1 (ஆசியா கோப்பை), 1-0 (கிங்ஸ் கோப்பை) என தாய்லாந்தை வீழ்த்தியது.
இப்போட்டியில் விளையாடிய 'சீனியர்' சுனில் செத்ரி 40, அம்ரிந்தர் சிங், விஷால், சந்தேஷ் ஜின்கன், சுபாஷிஷ் போஸ், ஆஷிக் குருனியன், உடான்டா சிங் இன்றைய அணியில் இடம் பெற்றுள்ளது, இந்தியா வெற்றிக்கு உதவலாம்.

Advertisement