வெற்றியுடன் துவக்குமா இந்தியா: இங்கிலாந்து டெஸ்ட் தொடரை

லீட்ஸ்:இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டியை பார்ப்பதே தனி சுகம். பசுமையான மைதானங்கள், சட்டென மாறும் வானிலை, 'ஜென்டில்மேன்' ரசிகர்கள் என ரம்மியமான சூழல் நிலவும். முன்பு பேட்டர்கள் மணிக்கணக்கில் நின்று, நிதானமாக விளையாடினர். இப்போது ஒரே நாளில் 400 ரன்னுக்கு மேல் அதிரடியாக எடுக்கின்றனர். இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலும் ரன் மழையை எதிர்பார்க்கலாம்.
கேப்டன் சுப்மன்: இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ('ஆண்டர்சன்-சச்சின்' டிராபி) பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் இன்று லீட்சில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் துவங்குகிறது. கோலி, ரோகித், அஷ்வின் ஓய்வு பெற்ற நிலையில், இந்திய டெஸ்ட் அணியின் புதிய அத்தியாயம் இளம் சுப்மன் கில் தலைமையில் ஆரம்பமாகிறது. இது, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கான (2025-27) இந்தியாவின் முதல் போட்டி என்பது கூடுதல் சிறப்பு.
காம்பிர் முடிவு: தலைமை பயிற்சியாளர் காம்பிருக்கு கடும் சவால் காத்திருக்கிறது. கடந்த 6 டெஸ்டில் (எதிர், நியூசி., ஆஸி.,) தோல்வியை சந்தித்த நிலையில், சரியான 'லெவன்' அணியை கண்டறிய வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். துவக்கத்தில் கே.எல்.ராகுல், ஜெய்ஸ்வால் வரலாம். 3வது இடத்தில் கருண் நாயர், 4வது வீரராக சுப்மன் களமிறங்கலாம். கூடுதல் பேட்டராக சாய் சுதர்சனுக்கு அறிமுக வாய்ப்பு அளிப்பாரா அல்லது வேகப்பந்துவீச்சு 'ஆல்-ரவுண்டர்களான' ஷர்துல் தாகூர், நிதிஷ் குமாரை சேர்ப்பாரா என்பது 'மில்லியன் டாலர்' கேள்வி.
பலமுனை போட்டி: எந்த ஆடுகளத்திலும் பந்தை சுழற்றும் திறன் பெற்ற குல்தீப் யாதவ், 7வது இடத்தில் பேட் செய்யக்கூடிய 'ஸ்பின்னர்' ரவிந்திர ஜடேஜா இடையே போட்டி காணப்படுகிறது. 'வேகத்தில்' பும்ரா, சிராஜ் இடம் பெறுவது உறுதி. உடற்தகுதி பிரச்னையால் அனைத்து போட்டிகளிலும் பும்ரா விளையாட இயலாது. இதனால் அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப் உள்ளிட்ட 'வேகங்கள்' வாய்ப்பை எதிர்பார்க்கின்றனர். 'கீப்பர்' பணிக்கு ரிஷாப் உள்ளார். காம்பிர் எடுக்கும் முடிவுகள் அடுத்த 45 நாள் டெஸ்ட் பயணத்தில் அதிக முக்கியத்துவம் பெறும்.
அனுபவ ஜோ ரூட்: இங்கிலாந்தை பொறுத்தவரை கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பலம். தற்போதைய இந்திய அணியில் அதிக அனுபவம் பெற்ற வீரரான ராகுல், 58 டெஸ்டில் (3257 ரன்) தான் விளையாடியுள்ளார். ஆனால், ஜோ ரூட் 153 டெஸ்டில், 36 சதம் உட்பட 13,006 ரன் எடுத்து மிரட்டுகிறார். கிராவ்லி, டக்கெட், போப், ஹாரி புரூக் என 'பேட்டிங்' வலுவாக உள்ளது.
ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் ஓய்வு, மார்க் உட், ஆர்ச்சர் (காயம்) இல்லாததால், பந்துவீச்சு பலவீனமாக உள்ளது. ஸ்டோக்ஸ், வோக்ஸ் தவிர பிரைடன் கார்ஸ், ஜோஷ் டங், பஷிர் என அனுபவமில்லாதவர்கள் இருப்பது இந்தியாவுக்கு சாதகம்.
'திரில்' அனுபவம்
இங்கிலாந்து பயிற்சியாளராக பிரண்டன் மெக்கலம் பொறுப்பேற்றதும், வீரர்களின் ஆட்டம் மாறியது. 'பாஸ் பால்' பாணியில் அதிரடியாக ரன் சேர்த்தனர். அதிக ரசிகர்களை கவர, இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டிக்கான ஆடுகளமும் பேட்டிங்கிற்கு சாதகமாக அமைக்கப்பட்டன.
இங்கு 2020-25ல் நடந்த 35 டெஸ்டில் 30 போட்டிக்கு முடிவு கிடைத்தன. 5 போட்டி மட்டுமே 'டிரா' ஆனது. ஓவருக்கு ரன் ரேட் 3.56 ஆக உயர்ந்தது. 2023ல் மான்செஸ்டர் டெஸ்டில் (ஓல்டு டிரபோர்டு) இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 592 ரன் (எதிர் ஆஸி.,) குவித்தது. 2021ல் இருந்து ஹெடிங்லி, லார்ட்சில் ஓவருக்கு 4 ரன் மேல் எடுக்கப்படுகின்றன.
முன்பு 250 ரன்னை 2 நாளில் அணிகள் எடுத்தன. இப்போது முதல் நாளிலேயே 400 ரன்னை எட்டுகின்றன. பேட்டர்கள் சுதந்திரமாக விளையாடுகின்றனர். கேப்டன்கள் துணிச்சலாக 'டிக்ளேர்' செய்கின்றனர். இதனால் 'சேஸ்' செய்யும் போது, 'டி-20' போல டெஸ்டிலும் விறுவிறுப்பு அதிகரிக்கிறது. இது போன்ற 'திரில்' அனுபவங்கள், ரன் மழையை இந்தியா-இங்கிலாந்து தொடரிலும் காணலாம்.
யார் ஆதிக்கம்
டெஸ்ட் அரங்கில் மோதிய 136 போட்டியில், இந்தியா 35, இங்கிலாந்து 51ல் வென்றன. 50 டெஸ்ட் 'டிரா'வில் முடிந்தன.
* இங்கிலாந்து மண்ணில் இவ்விரு அணிகள் மோதிய 67 டெஸ்டில், இங்கிலாந்து 36, இந்தியா 9ல் வெற்றி பெற்றன. 22 டெஸ்ட் 'டிரா' ஆகின.
* முதல் போட்டி நடக்கும் ஹெடிங்லி மைதானத்தில் (லீட்ஸ்), இந்திய அணி விளையாடிய 7 டெஸ்டில், 2 வெற்றி (1986, 2002), ஒரு 'டிரா'வை (1979) பதிவு செய்தது. இங்கிலாந்து அணி 4ல் (1952, 1959, 1967, 2021) வென்றது.
20வது முறை
டெஸ்ட் தொடரில் பங்கேற்க இந்திய அணி, 20வது முறையாக இங்கிலாந்து சென்றுள்ளது. முன்னதாக மூன்று முறை (1971, 1986, 2007) தொடரை கைப்பற்றிய இந்தியா, இரண்டு முறை (2002, 2021-22) தொடரை சமன் செய்தது. இங்கிலாந்து அணி 14 முறை (1932, 36, 46, 52, 59, 67, 74, 79, 82, 90, 96, 2011, 2014, 2018) கோப்பை வென்றது.
* அஜித் வடேகர் (1971), கபில்தேவ் (1986), டிராவிட் (2007) தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி கோப்பை வென்றது. கங்குலி (2002), கோலி-பும்ரா (2021-22) வழிநடத்திய இந்திய அணி, டெஸ்ட் தொடரை சமன் செய்தது.
ஆடுகளம் எப்படி
லீட்ஸ், ஹெடிங்லி மைதான ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமானது. 'டாஸ்' வெல்லும் அணி, 'பவுலிங்' தேர்வு செய்யலாம். இங்கு, இதுவரை நடந்த 84 டெஸ்டில், முதலில் 'பேட்' செய்த அணி 29, 'சேஸ்' செய்த அணி 36 முறை வென்றுள்ளன.
மழை வருமா
முதல் நாளில் மழைக்கு வாய்ப்பில்லை என்பதால் போட்டி முழுமையாக நடக்கும். அடுத்த இரண்டு நாட்கள் 60-66%, கடைசி 2 நாட்கள் 25% மழைக்கு வாய்ப்பு உள்ளது.
அதிகபட்ச ஸ்கோர்
இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி, அதிகபட்சமாக 759/7 ('டிக்ளேர்', 2016, இடம்: சென்னை) ரன் குவித்தது. இங்கிலாந்து மண்ணில் இந்திய அணியின் அதிகபட்ச ஸ்கோர் 664 (2007, இடம்: லண்டன், ஓவல்) ரன்னாக உள்ளது.
* பர்மிங்காம் டெஸ்டில் 710/7 ('டிக்ளேர்', 2011) ரன் குவித்தது, இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்தின் அணியின் அதிகபட்ச ஸ்கோராக உள்ளது.
ரூட் முதலிடம்
இவ்விரு அணிகள் மோதிய டெஸ்டில் அதிக ரன் குவித்த வீரர்கள் வரிசையில் இங்கிலாந்தின் ஜோ ரூட் முதலிடம். இதுவரை 30 டெஸ்டில், 10 சதம் உட்பட 2846 ரன் எடுத்துள்ளார். அடுத்த இரு இடங்களில் இந்தியாவின் சச்சின் (2535 ரன், 32 டெஸ்ட்), கவாஸ்கர் (2483 ரன், 38 டெஸ்ட்) உள்ளனர்.
* தற்போது விளையாடும் இந்திய வீரர்களில் ரவிந்திர ஜடேஜா (1031 ரன், 20 டெஸ்ட்) அதிக ரன் எடுத்துள்ளார்.
ஆண்டர்சன் '149'
இவ்விரு அணிகள் மோதிய டெஸ்டில் அதிக விக்கெட் சாய்த்த பவுலர்களில் இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் முன்னிலை வகிக்கிறார். இவர், 39 டெஸ்டில், 149 விக்கெட் சாய்த்துள்ளார். அடுத்த மூன்று இடங்களில் இந்தியாவின் அஷ்வின் (114 விக்கெட், 24 டெஸ்ட்), சந்திரசேகர் (95 விக்கெட், 23 டெஸ்ட்), கும்ளே (92 விக்கெட், 19 டெஸ்ட்) உள்ளனர்.
* தற்போது விளையாடும் இந்திய பவுலர்களில் ஜடேஜா (70 விக்கெட், 20 டெஸ்ட்) அதிக விக்கெட் சாய்த்துள்ளார்.