ஆசிய ஸ்குவாஷ்: பைனலில் இந்தியா

ஜோஹர்: ஆசிய ஸ்குவாஷ் இரட்டையர் சாம்பியன்ஷிப் தொடர் மலேசியாவில் நடக்கிறது. ஆண்கள் இரட்டையரில் நடப்பு சாம்பியன், இந்தியாவின் அபே சிங், வேலவன் செந்தில்குமார் ஜோடி, அரையிறுதியில் ஹாங்காங்கின் சிம் வாங், மின் ஹாங் டங் ஜோடியை எதிர்கொண்டது.
முதல் செட்டை 11-5 என கைப்பற்றிய இந்திய ஜோடி, அடுத்த செட்டையும் 11-9 என வசப்படுத்தியது. முடிவில் இந்திய ஜோடி 2-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறியது.
பெண்கள் இரட்டையரில் இத்தொடரின் 'நம்பர்-2' ஜோடி, இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா, அனாஹத் சிங் ஜோடி, ஹாங்காங்கின் கிறிஸ்டி வான், டாபை டிசே ஜோடியை சந்தித்தது. 22 நிமிடம் மட்டும் நடந்த இப்போட்டியில் இந்திய ஜோடி, 2-0 (11-7, 11-6) என நேர் செட்டில் வெற்றி பெற்று, பைனலுக்குள் நுழைந்தது.
கலப்பு இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் அபே சிங், அனாஹத் சிங் ஜோடி, மலேசியாவின் அய்னா கமானி, ஷபிக் கமல் ஜோடியுடன் மோதியது. இதில் இந்திய ஜோடி 2-1 என்ற (11-8, 10-11, 11-5) கணக்கில் வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறியது.