மான்செஸ்டர் சிட்டி அணி 'ஹாட்ரிக்': யுவென்டஸ் அணியை வீழ்த்தியது

ஆர்லாண்டோ: கிளப் உலக கோப்பை கால்பந்து லீக் போட்டியில் மான்செஸ்டர் சிட்டி அணி, யுவென்டஸ் அணியை வீழ்த்தி 'ஹாட்ரிக்' வெற்றி பெற்றது.

அமெரிக்காவில், உலகின் முன்னணி கால்பந்து கிளப் அணிகள் பங்கேற்கும், 'பிபா' உலக கோப்பை 21வது சீசன் நடக்கிறது. ஆர்லாண்டோவில் நடந்த 'ஜி' பிரிவு லீக் போட்டியில் மான்செஸ்டர் சிட்டி (இங்கிலாந்து), யுவென்டஸ் (இத்தாலி) அணிகள் மோதின. அபாரமாக ஆடிய 'நடப்பு சாம்பியன்' மான்செஸ்டர் சிட்டி அணி 5-2 என வெற்றி பெற்றது. முதலிரண்டு போட்டியில் வைடாட் ஏ.சி., (மொராக்கோ), அல் ஐன் (யு.ஏ.இ.,) அணிகளை வீழ்த்திய சிட்டி அணி, 'ஹாட்ரிக்' வெற்றியை பதிவு செய்தது.
'ஜி' பிரிவில் முதலிரண்டு இடத்தை கைப்பற்றிய மான்செஸ்டர் சிட்டி (9 புள்ளி), யுவென்டஸ் (6) 'நாக்-அவுட்' சுற்றுக்கு முன்னேறின.


மாட்ரிட் வெற்றி: பிலடெல்பியாவில் நடந்த 'எச்' பிரிவு லீக் போட்டியில் ரியல் மாட்ரிட் (ஸ்பெயின்), ரெட் புல் சால்ஸ்பர்க் (ஆஸ்திரியா) அணிகள் மோதின. இதில் மாட்ரிட் அணி 3-0 என வெற்றி பெற்றது. மற்றொரு 'எச்' பிரிவு போட்டியில் அல்-ஹிலால் அணி (சவுதி அரேபியா) 2-0 என பச்சுகா அணியை (மெக்சிகோ) அணியை வென்றது.

'எச்' பிரிவில் முதலிரண்டு இடம் பிடித்த ரியல் மாட்ரிட் (7 புள்ளி), அல் ஹிலால் (5) அணிகள் 'நாக்-அவுட்' சுற்றுக்குள் நுழைந்தன.

'ரவுண்டு-16' போட்டியில் மான்செஸ்டர் சிட்டி - அல் ஹிலால் (ஜூன் 30), ரியல் மாட்ரிட் - யுவென்டஸ் (ஜூலை 1) அணிகள் மோதுகின்றன.

Advertisement