பஸ் படிக்கட்டுகளில் மாணவர்கள் பயணம்  கட்டுப்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை: பள்ளி மாணவர்கள் பஸ் படிக்கட்டுகளில் தொங்கியவாறு பயணம் செய்வதை கட்டுப்படுத்த அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

திருச்செந்துார் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த பொதுநல மனு:அரசு போக்குவரத்துக் கழக பஸ்களில் பள்ளி மாணவர்கள் புத்தகப்பை, உணவுப் பைகளுடன் பயணிக்கின்றனர். கூட்ட நெரிசலில் சிரமப்படுகின்றனர். நெரிசலை தவிர்க்க கல்வி நிறுவனங்களுக்கு அருகிலுள்ள பஸ் ஸ்டாப்களில் பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கிச் செல்வதை சில டிரைவர்கள் தவிர்க்கின்றனர். இதனால் மாணவர்கள் குறித்த நேரத்தில் செல்ல இயலவில்லை.கூட்ட நெரிசலால் மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கியவாறு பயணம் செய்கின்றனர். சென்னையில் சில ஆண்டுகளுக்கு முன் படிக்கட்டில் பயணம் செய்த 4 மாணவர்கள் மீது லாரி உரசியதில் இறந்தனர்.சில மாணவர்கள் பிறரின் கவனத்தை ஈர்க்க, சமூக வலை தளங்களில் தங்களைப் பற்றிய செய்திகள் வரவேண்டும் என்ற நோக்கில் படிக்கட்டில் சாகச பயணம் செய்கின்றனர்.

தமிழகத்தில் மாணவர்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும். போக்குவரத்து நெரிசல் மிகுந்த வழித்தடங்களில் பள்ளி துவங்கும் மற்றும் முடிவடையும் நேரத்தில் மாணவர்களுக்கு சிறப்பு பஸ்களை இயக்க வலியுறுத்தி தமிழக போக்குவரத்துத்துறை கூடுதல் தலைமைச் செயலர், பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர், அரசு போக்குவரத்துக் கழக நிர்வாகங்களுக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு பிறப்பித்த உத்தரவு: பாதுகாப்பு கருதி படிக்கட்டு பயணத்தை தவிர்க்குமாறு மாணவர்களுக்கு பஸ் கண்டக்டர், டிரைவர்கள் அறிவுறுத்துகின்றனர். இதில் நிர்வாக ரீதியாக குறைபாடு காண முடியாது. நகர், கிராமப்புறங்களில் பள்ளி மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கியவாறு பயணம் செய்வதை கட்டுப்படுத்த அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவையெனில் கூடுதல் பஸ்களை இயக்குவது குறித்து முடிவெடுக்க வேண்டும்.

வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.

Advertisement