2 மாதமாக குடிநீர் வழங்காததை கண்டித்து குடங்களுடன் மறியல்

ராசிபுரம் : ராசிபுரம் அருகே, இரண்டு மாதமாக குடிநீர் வழங்காததை கண்டித்து, 20க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.



ராசிபுரம் அடுத்த பட்டணம் டவுன் பஞ்.,க்குட்பட்ட, 8வது வார்டு பகுதியில், 70க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த, 60 நாட்களாக அப்பகுதிக்கு குடிநீர் வழங்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது. இதுகுறித்து பலமுறை பொதுமக்கள் டவுன் பஞ்., நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர். ஆனால், இதற்கு முறையான நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து, நேற்று, 20க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் ராசிபுரம் - -புதுப்பட்டி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



ராசிபுரம் போலீசார், சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மறியலை கைவிட்டனர். மறியலால், அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


இதுகுறித்து, டவுன் பஞ்., செயல் அலுவலர்களிடம் கேட்டபோது, 'மோட்டார் பழுதானதால், 10 நாட்கள் மட்டுமே தான் குடிநீர் வழங்கவில்லை எனவும், வேறு மோட்டாரை வரவழைத்து தண்ணீர் வழங்குவதாக' தெரிவித்தனர்.

Advertisement