136 அடியை நெருங்கும் முல்லைப்பெரியாறு; கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

1


திருவனந்தபுரம்: கேரளாவில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியை நெருங்கியுள்ளது. இதனால், கரையோர மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.


கேரளாவில் பருவமழை தீவிரமடைந்து வருவதால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. தொடர்ந்து பெய்யும் கனமழை காரணமாக, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.


இன்றும், நாளையும் பத்தினம்திட்டா, கோட்டயம், இடுக்கி, மலப்புரம், வயநாடு ஆகிய 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


கோட்டயம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பள்ளிகள் நிவாரண முகாம்களாக செயல்பட்டு வருகின்றனர்.


தொடர் கனமழையால் முல்லைப்பெரியாறு அணியின் நீர்மட்டம் 135.35 அடியாக உயர்ந்துள்ளது. நீர்மட்டம் 136 அடியை எட்டும் போது, அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படும். எனவே, முல்லைப் பெரியாறு கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பெரியாறு, மஞ்சுமலை, உப்புத்துறை, எலப்பாரா, ஐயப்பன் கோவில், கஞ்சியார், அனவிலாசம் மற்றும் உடும்பன்சோலை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதற்காக இடுக்கியில் 20 நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன.


இதனிடையே,கரையோர மக்களை முழுவதுமாக அப்புறப்படுத்தப்பட்ட பிறகு, முல்லைப்பெரியாறு அணையில் இருந்து பகல் நேரத்தில் மட்டும் தண்ணீரை வெளியேற்ற கலெக்டர் விக்னேஷ்வரி உத்தரவிட்டுள்ளார்.


அதேபோல, மணிமலை, பம்பை, மூவாட்டுபுழா, பாரதபுழா,அச்சன்கோவில், சாலக்குடி,கபனி உள்ளிட்ட ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனிடையே, இன்று காலை 11 மணிக்கு திருச்சூரில் உள்ள பேச்சி அணையில் 4 கதவுகள் வழியாக தண்ணீர் திறக்கப்பட இருக்கிறது.


நாளை (ஜுன் 29) வரை கனமழை நீடிக்கும் என்பதால், ஆறுகளை ஒட்டியுள்ள பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Advertisement