பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்: 13 ராணுவ வீரர்கள் பலி

6

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 13 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். 10 வீரர்கள் மற்றும் 19 மக்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதத்தை தூண்டிவிட்டு வரும் பாகிஸ்தானில், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். ராணுவத்தினர் மற்றும் பாதுகாப்பு படையினரை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுகிறது.


இந்நிலையில், கைபர் பக்துன்க்வா மாகாணத்தின், வடக்கு வஜீரிஸ்தான் மாவட்டத்தில் ராணுவ கான்வாய் மீது இன்று, தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவன் வெடிகுண்டு நிரப்பிய வாகனத்துடன் புகுந்து அதனை வெடிக்கச் செய்தான். இதில் 13 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 10 ராணுவ வீரர்களும், 10 அப்பாவி மக்களும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இந்த தாக்குதலில், அங்கிருந்த 6 வீடுகள் சேதம் அடைந்தன. இதில் ஆறு குழந்தைகளுக்கு காயம் ஏற்பட்டது. சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.


இந்த தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. இருப்பினும் அந்த பகுதியில் அடிக்கடி தாக்குதல் நடத்தும் தெஹக்ரீக் ஐ தலிபான் பாகிஸ்தான் அமைப்புக்கு இதில் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

Advertisement