சாலையில் சுற்றித்திரிந்த 7 மாடுகள் பறிமுதல்

திருத்தணி:சாலையில் சுற்றித்திரிந்த 7 மாடுகளை, நகராட்சி ஊழியர்கள் பறிமுதல் செய்தனர்.

திருத்தணி நகராட்சியில் பேருந்து நிலையம், அரக்கோணம் சாலை, சித்துார் சாலை, சன்னிதி தெரு மற்றும் சென்னை சாலை ஆகிய இடங்களில், போக்குவரத்திற்கு இடையூறாக கால்நடைகள் சுற்றித்திரிந்து வருகிறது. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்து வருகின்றனர்.

இது குறித்து நம் நாளிதழில், கடந்த 26ம் தேதி செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, கலெக்டர் பிரதாப் உத்தரவின்படி, திருத்தணி நகராட்சி ஆணையர் பாலசுப்ரமணியம் தலைமையில், துப்புரவு ஆய்வாளர் ரவிச்சந்திரன் மற்றும் நகாரட்சி ஊழியர்கள் நேற்று ஆய்வு செய்தனர்.

அப்போது, சன்னிதி தெரு, புதிய சென்னை சாலை மற்றும் அரக்கோணம் சாலை ஆகிய இடங்களில் சுற்றித்திரிந்த, 7 மாடுகளை பிடித்து, நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கட்டி வைத்துள்ளனர்.

மேலும், மாடுகளின் உரிமையாளர்களுக்கு, முதற்கட்டமாக தலா 500 ரூபாய் அபராத தொகை விதிக்கப்பட்டுள்ளது.

இனிவரும் நாட்களில் போக்குவரத்திற்கு இடையூறாக மாடுகள் சுற்றித்திரிந்தால், கால்நடைகளை பிடித்து கோசாலையில் ஒப்படைக்கப்படும் என, உரிமையாளர்களுக்கு எச்சரித்துள்ளனர்.

Advertisement