பெரியாறு அணை நீர்மட்டம் 136 அடியை எட்டுவதற்குள் மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தும் கேரளா -'ரூல்கர்வ் 'நடைமுறையை நீக்க தமிழக விவசாயிகள் வலியுறுத்தல்

கூடலுார்:முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 136 அடியை எட்டுவதற்குள் அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட உள்ளதாகக் கூறி கேரளாவில் ஆற்றின் கரையோரப் பகுதியில் வசிப்பவர்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்து இடுக்கி மாவட்டம் நிர்வாகம் பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி 135.60 அடியை எட்டியது (மொத்த உயரம் 152 அடி). அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3786 கன அடியாக உள்ளது. தமிழகப் பகுதிக்கு 2117 கன அடி திறக்கப்பட்டுள்ளது. நீர் இருப்பு 6017 மில்லியன் கன அடியாகும். பெரியாறில் 19.4 மி.மீ., தேக்கடியில் 5.8 மி.மீ., மழை பதிவானது.

வெளியேற்றம்



'ரூல்கர்வ்' விதிமுறைப்படி ஜூன் 30 வரை அணையில் 136 அடிவரை மட்டுமே தேக்க முடியும். நீர்மட்டம் 136 அடிக்கு மேல் உயராமல் நிலை நிறுத்த அணைக்கு வரும் நீர்வரத்தை தமிழகப் பகுதிக்கும், அணையை ஒட்டியுள்ள ஷட்டர்கள் வழியாக கேரள பகுதிக்கும் திறக்கப்படும்.

கேரள பகுதி வழியாக திறக்கப்படும் தண்ணீர் வண்டிப்பெரியாறு, மஞ்சுமலை, உப்புதுரை, ஏலப்பாறை, ஐயப்பன் கோயில், காஞ்சியாறு, ஆன விலாசம், உடுப்பன்சோலை வழியாக இடுக்கி அணையை சேரும்.

இதனால் ஆற்றின் கரையோரப் பகுதியில் வசிக்கும் 883 குடும்பங்களை சேர்ந்த 3220 பேரை வெளியேற்றி பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்க இடுக்கி மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

மக்களிடையே அச்சம்



இடுக்கி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. மேலும் 2 நாட்களாக கன மழைக்கான ஆரஞ்ச் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.

பெரியாறு அணையில் இருந்து கேரள பகுதிக்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு முன்பாகவே மழையால் வல்லக்கடவில் துவங்கும் ஆற்றில் நீர்வரத்து அதிகமாக உள்ளது.

இதற்கெல்லாம் அச்சப்படாத கேரள மக்களை பெரியாறு அணையில் இருந்து அதே ஆற்றில் திறக்கப்பட உள்ள குறைவான தண்ணீரை காரணம் காட்டி 20க்கும் மேற்பட்ட முகாம்கள் அமைத்து அதில் மக்களை தங்க வைத்து இடுக்கி மாவட்டம் அச்சமடையச் செய்து வருவது வேடிக்கையாக உள்ளது.

வலியுறுத்தல்



தமிழக விவசாயிகள் கூறும்போது: அணையின் நீர்மட்டம் நேற்று மாலை 4:00 மணி நிலவரப்படி 135.85 அடியை எட்டியது.

அணையில் 142 அடி நீர் தேக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் ரூல்கர்வ் விதிமுறையை நடைமுறைப்படுத்தியதை நீக்க வேண்டும்.

இதனால் மழைக்காலங்களில் 136 அடி கூட தேக்க முடியாத நிலை ஏற்படுகிறது. தற்போது 136 அடியை எட்டுவதற்குள் அம்மாநில மக்களிடைய அச்சத்தை ஏற்படுத்தி நீர்மட்டம் உயர்த்துவதை தடுக்க புதிய நாடகத்தை கேரளா அரங்கேற்றியுள்ளது என்றனர்.

Advertisement