அரசின் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் வாங்க...ஆர்வமில்லை: பயனாளிகள் பங்களிப்பு தொகை அதிகம் என தயக்கம்

திருத்தணி:திருத்தணி தாலுகாவில் நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் சார்பில் மூன்று இடங்களில், 479.33 கோடி ரூபாயில் கட்டியுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில், வீடு வாங்க பயனாளிகள் தயக்கம் காட்டுகின்றனர். போதிய அடிப்படை வசதிகள் இல்லாததாலும், பயனாளிகள் பங்களிப்பு தொகை அதிகம் என்பதாலும், வீடு வாங்க பயனாளிகள் முன் வருவதில்லை.
திருத்தணி தாலுகாவில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம், முருக்கம்பட்டு பகுதியில் 135.22 கோடி ரூபாயில் 1,040 அடுக்குமாடி குடியிருப்புகள், தாழவேடு பகுதியில் 67.34 கோடி ரூபாயில் 520 வீடுகள் மற்றும் அருங்குளம் பகுதியில் 276.77 கோடி ரூபாயில் 2,112 அடுக்குமாடி குடியிருப்புகள் என 3,672 வீடுகள் கட்டுவதற்கு மொத்தம் 479.33 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு 2020ம் ஆண்டு அரசாணை வெளியிட்டது.
பின், 2021ம் ஆண்டு மூன்று இடங்களிலும் டெண்டர் விடப்பட்டு கட்டட பணி துவங்கியது. தற்போது முருக்கம்பட்டு மற்றும் தாழவேடு ஆகிய பகுதிகளில் தரைத்தளம் மற்றும் நான்கு அடுக்கு குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.
அருங்குளம் பகுதியில் தரைத்தளம் மற்றும் ஐந்து அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இந்த வீடுகள், திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு புறம்போக்கு நிலங்களில் வாழும் குடியிருப்புவாசிகள், பொருளாதாரத்தில் நலிவுற்ற வீடற்ற ஏழை மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. வீடுகள் ஒதுக்கீடு கோரும் நபரின் ஆண்டு வருமானம் 3 லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும்.
வீடுகள் ஒதுக்கீடு
இத்திட்டத்தில் வழங்கப்படும் வீட்டின் மதிப்பு 13 லட்சம் ரூபாய். இதில், மத்திய அரசு 1.50 லட்சம், மாநில அரசு 7 லட்சம் என மொத்தம் 8.50 லட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது.
மீதமுள்ள 4.50 லட்சம் ரூபாயை பயனாளிகள் செலுத்தி வீடுகள் பெறலாம். இத்திட்டத்தில் வீடுகள் தேவைப்படும் பயனாளிகள் ஆதார், ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, வங்கி புத்தகத்தின் நகல் ஆகியவற்றை இணைத்து, நகர்ப்புற மேம்பாட்டு வாரிய அலுவலகத்தில் வழங்க வேண்டும்.
இந்த மனுக்களை கலெக்டருக்கு பரிந்துரை செய்து, தகுதி வாய்ந்த பயனாளிகளை தேர்வு செய்து கொடுத்த பின், வீடுகள் ஒதுக்கீடு செய்து தரப்படும். கடந்த ஆறு மாதங்களுக்கு முன் மூன்று இடங்களில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில், வீடுகள் தேவைப்படுவர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
எதிர்பார்ப்பு
ஆனால், இதுவரை 641 பேர் மட்டுமே அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் வாங்குவதற்கு முன்பதிவு செய்துள்ளனர். பயனாளிகள் பங்களிப்பு தொகை அதிகம்; அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு செல்வதற்கு சரியான சாலை வசதி இல்லை. ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ளதாலும், பயனாளிகள் வீடுகள் வாங்க முன்பதிவு செய்வதில் தயக்கம் காட்டுகின்றனர்.
இது குறித்து, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் முருக்கம்பட்டு, தாழவேடு மற்றும் அருங்குளம் ஆகிய மூன்று பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் நவீன வசதிகளுடன் 410 சதுர அடி அளவில் கட்டப்பட்டுள்ளன. இதுவரை முருக்கம்பட்டில் 138 பேரும், தாழவேடில் 183 பேரும், அருங்குளம் பகுதியில் 320 பேரும் என மொத்தம், 641 பேர் மட்டுமே வீடுகள் வாங்குவதற்கு முன்பதிவு செய்துள்ளனர்.
முருக்கம்பட்டு மற்றும் தாழவேடு அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு 'லிப்ட்' வசதியில்லை. அருங்குளம் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு மட்டும் 'லிப்ட்' வசதி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அடுக்குமாடி குடியிருப்புகள், கிராமத்தில் இருந்து 1.5 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளன. சாலை வசதி, 'லிப்ட்' வசதி ஏற்படுத்தவில்லை. முக்கியமாக பேருந்து வசதி இல்லை. ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ளதால், அங்கு போதிய பாதுகாப்பு இருக்காது.
மேலும் பயனாளிகள் பங்களிப்பு தொகை அதிகம் என்பதாலும், பலர் வீடுகள் வாங்குவதற்கு ஆர்வம் காட்டவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் பங்களிப்பு தொகையை குறைக்க வேண்டும் என பயனாளிகள் எதிர்பார்க்கின்றனர்.
மேலும்
-
சண்டை முடிந்தது சமாதானம் பிறந்தது: எலான் மஸ்க் சிறந்த மனிதர் என்கிறார் அதிபர் டிரம்ப்
-
ஈரான் போர் வெற்றிக்குப் பிறகு சாதகமான வாய்ப்புகள்; இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
-
அரசு கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை... 'டல்'; முதலாமாண்டு வகுப்புகள் இன்று துவக்கம்
-
விதவிதமான பொய்கள் சொல்லி சைபர் அடிமைகளாக மாற்றினேன்; கைதானவர் வாக்குமூலம்
-
போதை கடத்தல் கும்பல் பிடியில் தமிழ் சினிமா: அர்ஜுன் சம்பத்
-
தினமலர் தலையங்கம்; விண்வெளி நிலையத்தில் இந்திய வீரர்; 'இஸ்ரோ' மேலும் சாதிக்க உதவும்!