முதலீடுகளை ஈர்ப்பதில் தி.மு.க., அரசு தோல்வி; புதிய வேலைவாய்ப்புகள் இல்லை என்கிறார் இ.பி.எஸ்.,!

சென்னை: ''முதலீடுகளை ஈர்ப்பதில் தி.மு.க., அரசு தோல்வி அடைந்துள்ளது. புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவில்லை'' என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக, ஆங்கில செய்தி சேனலில் வெளியான செய்தியை சுட்டிக்காட்டி, இ.பி.எஸ்., வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: தொழில்துறை மேம்பாடு என்பது ஒரு வீண் வேலைத்திட்டம் அல்ல. இது இளைஞர் வேலைவாய்ப்பு மற்றும் பிராந்திய செழிப்புக்கான பொருளாதார சமத்துவத்திற்கான பணியாகும்.
முதலீடுகளை ஈர்ப்பதில் தி.மு.க., அரசு தோல்வி அடைந்துள்ளது. முதலீட்டாளர்கள் வேறு மாநிலத்திற்கு செல்ல விரும்புகின்றனர். தி.மு.க., அரசு புரிந்துணர்வு ஒப்பந்தங்களைத் தாண்டி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவில்லை. நமது தொழில்துறை செயலிழந்து போயுள்ளது. நமது தொழில்முனைவோர் காத்திருக்கிறார்கள்.
இளைஞர்கள் வெளியேறுகின்றனர். இதை மாற்ற அ.தி.மு.க., உறுதிபூண்டுள்ளது. இந்தியாவின் அடுத்த கட்ட தொழில்துறை வளர்ச்சியை தமிழகம் அடைய முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். தொழில் முதலீடுகள் புரிந்துணர்வு ஒப்பந்தங்களோடு நின்றுவிடுகின்றன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.




