'தி.மு.க., அணியில் பிளவு என பொய் பிரசாரம்'

தஞ்சாவூர்: தி.மு.க., கூட்டணியில் பிளவு என்பது போல, பொய் பிரசாரம் நடத்தப்படுவதாக உயர்கல்வி துறை அமைச்சர் செழியன் கூறினார்.

கும்பகோணத்தில், அவர் அளித்த பேட்டி: தி.மு.க., கூட்டணி யாராலும் பிரிக்க முடியாத, அசைக்க முடியாத லட்சிய கூட்டணி. தேர்தலுக்கு கூடுவோம், பின் பிரிந்து கொள்வோம் என்பது, தி.மு.க., கூட்டணிக்கு பொருந்தாது. எதிர் கூட்டணி, ஒற்றுமை இன்றி, யார் யாரோடு சேர்வது என்ற நிலை இல்லாததால், தி.மு.க., கூட்டணியில் பிளவு என்பது போல இட்டுகட்டி பொய் பிரசாரம் செய்கின்றனர்.

தேர்தலில், இரண்டாவது இடம் யாருக்கு? பா.ஜ.,வுக்கா, அ.தி.மு.க.,வுக்கா, நாம் தமிழர் கட்சிக்கா, த.வெ.க.,வுக்கா என பிரச்னை நிலவுகிறது.

தமிழக கல்லுாரிகளின் காலி பணியிடங்களில், கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். நிரந்தர பேராசிரியர் பணிக்கான தேர்வு ஜூன், ஜூலையில் நடந்திருக்க வேண்டும்.

நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால், தீர்ப்புக்கு பின், தேர்வு நடத்தப்படும். கருணாநிதி பல்கலைக்கு அனுப்பிய கோப்புகளில் கவர்னர் இன்னும் கையெழுத்திடவில்லை. அவரை சந்திக்க நேரம் கேட்கப்பட்டுள்ளது.

அவர் அனுமதி மறுத்தால் நீதிமன்றத்தை நாடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement