நார்மில்லில் தீ விபத்து ரூ.20 லட்சம் சேதம்

ப.வேலுார், ப.வேலுார் அருகே, குப்புச்சிபாளையத்தை சேர்ந்தவர் தியாகராஜன், 45; செம்மேடு பகுதி
யில் பி.ஆர்.எஸ்., என்ற பெயரில் தேங்காய் நார் மில் நடத்தி வருகிறார். நேற்று காலை, 10:30 மணிக்கு நார்மில் அருகே சென்ற மின்சார கம்பத்தில் இருந்து, தேங்காய் நாரில் தீப்பொறி விழுந்து தீப்பற்றியது. அப்போது, காற்று பலமாக வீசியதால், அருகில் இருந்த தேங்காய் நார்களிலும் தீ பரவியது. இதைக்கண்ட, அப்போது பணியில் இருந்த ஊழியர்கள் தீயை அணைக்க முயன்றனர். தீ வேகமாக பரவியதால், வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினர், இரண்டு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால், அங்கிருந்த தேங்காய் நார்கள் முற்றிலும் எரிந்து தீயில் கருகின. இதன் சேத மதிப்பு, 20 லட்சம் ரூபாய். இந்த தேங்காய் நார்மில்லில், இந்தாண்டு மட்டும் மூன்றாவது முறையாக தீவிபத்து நடந்தது குறிப்பிடத்தக்கது. தீவிபத்து குறித்து, ப.வேலுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement