கள் பிரச்னைக்கு பதிலடி கிருஷ்ணசாமிக்கு சீமான் 'செக்'

புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமிக்கு நெருக்கடி தரும் வகையில், அவர் நீண்ட காலமாக வலியுறுத்தி வரும் கோரிக்கையை கையில் எடுத்து போராட, நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் முடிவு செய்து உள்ளார்.

நாம் தமிழர் கட்சி, தமிழக கள் இயக்கம் உள்ளிட்ட அமைப்புகள், கள் இறக்க விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என, குரல் கொடுத்து வருகின்றன.



நாம் தமிழர் கட்சி சார்பாக, பனை ஏறி கள் இறக்கும் போராட்டத்தை, சீமான் நடத்தினார்.
சீமானின் போராட்டத்திற்கு புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி எதிர்ப்பு தெரிவித்தார். அவர், 'கள்ளின் ஆபத்து தன்மையை உணராதவர்கள், அரசியல் ரீதியாக தவறான பிரசாரத்தை மேற்கொள்கின்றனர்.


கள் இறக்க அனுமதித்தால், கிராமந்தோறும் நாட்டு சாராயம் காய்ச்சுவது அதிகரிக்கும். எனவே, கள் இறக்கும் போராட்டத்தை தடை செய்ய வேண்டும்' என கூறியிருந்தார். சீமானை கைது செய்யவும் அவர் வலியுறுத்தினார்.



இதனால், கிருஷ்ணசாமி மீது சீமான் அதிருப்தி அடைந்தார். 'தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தை, பட்டியலினத்தவர் பிரிவில் இருந்து மாற்ற வேண்டும்' என, கிருஷ்ணசாமி போராடி வருகிறார்.


அவருக்கு 'செக்' வைக்கும் வகையிலும், தன்னை எதிர்க்கும் அவருக்கு பதிலடி கொடுப்பது போலவும், தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தினர் ஆதரவை தன் பக்கம் திருப்பும் நோக்கிலும் சீமான் முடிவெடுத்து உள்ளார்.


பட்டியல் பிரிவில் இருந்து தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை மையப்படுத்தி, நா.த.க., சார்பில் தேனியில் நாளை மாநாடு நடத்தப்படுகிறது. அதில் சீமான் பங்கேற்கிறார்.



- நமது நிருபர் -

Advertisement