சட்டம் -- ஒழுங்கு பிரச்னையில் தெளிவாக விளக்கம் அளிக்க வேண்டும்; போலீசாருக்கு முதல்வர் உத்தரவு
சென்னை : ''காவல் துறையினர் முழுமையாக செயல்பட, சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி, சட்டம் - ஒழுங்கை பேணிக்காத்து, நீதியை நிலைநாட்ட வேண்டும்,'' என, காவல் துறை அதிகாரிகளை, முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.
தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு நிலை குறித்து, முதல்வர் ஸ்டாலின் நேற்று தலைமை செயலகத்தில் ஆய்வு நடத்தினார். தலைமை செயலர் முருகானந்தம், உள்துறை செயலர் தீரஜ்குமார், டி.ஜி.பி., சங்கர் ஜிவால், பொதுத்துறை செயலர் ரீட்டா ஹரிஷ் தக்கர், சென்னை போலீஸ் கமிஷனர் அருண் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
சென்னை தவிர்த்து பிற மண்டல ஐ.ஜி.,க்கள், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே பங்கேற்றனர்.
கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
மாநிலத்தில் சட்டம், ஒழுங்கு, பொது அமைதியை, மிகவும் கவனமாக அரசு கையாண்டு வருகிறது. தமிழகத்தில் தொழில் வளர்ச்சி, முதலீடு, புதிய தொழிற்சாலைகள், புதிய வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. அனைத்து தரப்பு மக்களும், அமைதியாக வாழ்கிற மாநிலமாக, தமிழகம் திகழ்கிறது.
இதற்கு காவல் துறையின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது.
போலீஸ் நிலையங்களுக்கு புகார் கொடுக்க வருவோரிடம், கண்ணியத்தோடு நடந்து கொள்ள வேண்டும். புகார்கள் மீது, குறித்த காலத்திற்குள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கஞ்சா, கள்ளச்சாராய வழக்குகளில் கைது செய்யப்படும் குற்றவாளிகளுக்கு, விரைந்து தண்டனை பெற்றுத்தர தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த, தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டம் - ஒழுங்கு தொடர்பான, முக்கிய பிரச்னைகள் ஏற்படும் போது, தொடர்புடைய காவல்துறை உயர் அலுவலர்கள், உடனடியாக ஊடகங்களை சந்தித்து, அந்த பிரச்னை குறித்து தெளிவாக விளக்கம் அளித்து, வதந்திகள் பரவுவதை தடுக்க வேண்டும்.
காவல்துறை மீதான நம்பிக்கையை நிலைநிறுத்த அது உதவும். ஜாதி மற்றும் சமய பூசல்களில் ஈடுபடுவோர், வதந்தி மற்றும் வெறுப்புணர்வை பரப்பி, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்போர் மீது, பதிவு செய்யப்படும் வழக்குகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
பொது இடங்களில், 'சிசிடிவி கேமராக்கள்' பொருத்துவது, குற்ற தடுப்பு நடவடிக்கைகளில், சமுதாயத்தின் பங்களிப்பை ஊக்குவித்து, குற்ற செயல்கள் நடக்காமல் தடுக்க, தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
காவல் துறையினர் முழுமையாக செயல்பட சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, காவல்துறையினர் சட்டம் - ஒழுங்கை பேணி காத்து, நீதியை நிலைநாட்ட வேண்டும்.
இவ்வாறு முதல்வர் பேசினார்.



மேலும்
-
கோவையில் செம்மொழி பூங்கா பணிகள் தாமதம்: தமிழக அரசின் முதன்மை செயலர் நேரில் ஆய்வு
-
மேற்கு மண்டல தபால் துறையில் 9 இடங்களில் ஐ.டி.சி., மையம்
-
100 பில்லியன் டாலர் ஏற்றுமதி இலக்கு சாத்தியமாகும்: மத்திய ஜவுளித்துறை இணையமைச்சர் நம்பிக்கை
-
சுற்றுலா பயணியிடம் லஞ்சம் வாங்கிய புகார் :எஸ்.எஸ்.ஐ., உட்பட இருவர் 'சஸ்பெண்ட்'
-
திருமண ஆசை காட்டி பலாத்காரம்: தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை
-
பின்னலாடை ஏற்றுமதியில் திருப்பூர் முன்மாதிரி: மத்திய அமைச்சர் புகழாரம்