குப்பை கிடங்கில் பிளாஸ்டிக் கழிவு

காரைக்குடி: பள்ளத்துாரில் குப்பை தரம் பிரிக்கப்படாமல் கொட்டுவதால் பிளாஸ்டிக்கழிவுகளை தின்று 3 நாட்களில் 4 மாடுகள் இறந்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

பள்ளத்துார் பேரூராட்சியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உள்ளனர். குப்பை கிடங்கிற்கு இதுவரை நிரந்தர இடம் ஒதுக்கப்படாததால், பல்வேறு இடங்களிலும் குப்பை கொட்டப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில், பேரூராட்சி சார்பில் வளமீட்பு பூங்காவுக்கு என தற்காலிக இடம் ஒதுக்கப்பட்டு குப்பை கொட்டப்பட்டு வருகிறது. இப்பகுதியில் முறையாக வேலி அமைத்து பாதுகாக்கப்படாததால் மாடுகள் பிளாஸ்டிக் கழிவுகளை தின்று உயிரிழக்கின்றன.

அப்பகுதி மக்கள் கூறுகையில், கோயில் பகுதிகளில் குப்பை கொட்டப்படுகிறது. பிளாஸ்டிக் கழிவு அதிகமாக கொட்டப்பட்டு குப்பை எரிக்கப்படுகிறது. பிளாஸ்டிக் கழிவுகளை தின்று 3 நாட்களில் 4 மாடுகள் இறந்து விட்டது. இறந்த மாடுகளைக் கூட அகற்றவில்லை.

பேரூராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், குப்பை கொட்டுவதற்கு நிரந்தர இடம் இதுவரை இல்லை. இதுகுறித்து தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். குப்பை முறையாக தரம் பிரிக்கப்படுகிறது. வேறு காரணங்களால் மாடுகள் இறந்திருக்கலாம்.

Advertisement