கண்டதேவி சொர்ண மூர்த்தீஸ்வரர் கோயில் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது

தேவகோட்டை: கண்டதேவி சொர்ண மூர்த்தீஸ்வரர் கோயில் திருவிழா கொடியேற்றம் நேற்று நடந்தது.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கண்டதேவியில் சிவகங்கை சமஸ்தான சொர்ணமூர்த்தீஸ்வரர் பெரியநாயகி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் ஆனித் திருவிழா மாம்பழத் திருவிழாவாக நடைபெறும்.

இந்தாண்டு ஆனித் திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக சிவன் படம் வரையப்பட்ட திருவிழாக் கொடி மேளதாளத்துடன் கோயில் மற்றும் ஊருணி உட்பட தேரோடும் வீதியில் வலம் வந்தது.

கோயிலில் கொடிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு கொடியேற்றமும் அதனைத் தொடர்ந்து சிறப்பு பூஜை நடந்தன. மாலையில் காப்புக்கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. திருமூலநாதன் சிவாச்சாரியார் சிறப்பு பூஜை செய்தார்.

சமஸ்தான கோயில் கண்காணிப்பாளர் சரவணன் உட்பட நான்கு நாட்டைச் சேர்ந்த மக்கள் பங்கேற்றனர். டி.எஸ். பி. கவுதம்,இன்ஸ்பெக்டர் சரவணன், தாசில்தார் சேதுநம்பு பங்கேற்றனர்.

முதல் நாளான நேற்று கேடக வாகனத்திலும் மற்ற நாட்களில் சிறப்பு வாகனங்களில் சொர்ண மூர்த்தீஸ்வரர், பெரியநாயகி அம்மன் உட்பட பஞ்ச மூர்த்திகள் அலங்காரத்தில் வீதி உலா வருவர். 5ம் நாள் திருக்கல்யாணம், 9ம் நாள் ஆனி கேட்டை நட்சத்திரத்தில் சொர்ண மூர்த்தீஸ்வரர் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் நடைபெற உள்ளது.

Advertisement