பயங்கரவாத வழக்கில் கைதானவர் சொத்து முடக்கம்; என்.ஐ.ஏ., நடவடிக்கை

சென்னை : திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே, நாச்சிகுளத்தைச் சேர்ந்தவர் பாவா பக்ருதீன், 44. இவர், நான்கு ஆண்டுகளுக்கு மேலாக மன்னார்குடியில் வசித்து வருகிறார். இதனால், மன்னை பாவா என, அழைக்கப்படுகிறார்.

தஞ்சாவூரில் ரியல் எஸ்டேட் தொழிலும் ஈடுபட்டு வருகிறார். இவர், ஹிஸ்ப் - உத் - தஹ்ரீர் என்ற பயங்கரவாத அமைப்புக்கு ஆட்களை சேர்த்து, ரகசிய பயிற்சி அளித்து வந்துள்ளார்.

இதுகுறித்து, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி, மன்னை பாவாவை பிப்ரவரி மாதம் கைது செய்தனர்.

தொடர் விசாரணையில், தஞ்சாவூர் காந்திஜி சாலையில் உள்ள, பல கோடி ரூபாய் மதிப்புள்ள கட்டடத்தில் பயங்கரவாத பயிற்சி அளித்து வந்தது தெரியவந்தது. இந்த நிலம், ஹசரத் சாம்ஸ் மன்சூர் பீர் அவுலியா தர்கா அறக்கட்டளைக்கு சொந்தமானது.

ஆனால், இந்த நிலம் முறையான பதிவு இல்லாமல், மன்னை பாவாவுக்கு விற்கப்பட்டு உள்ளதையும் என்.ஐ.ஏ., அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

இந்நிலையில், மன்னை பாவா பயங்கரவாத பயிற்சி அளித்து வந்த, பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் மற்றும் கட்டடத்தை, என்.ஐ.ஏ., அதிகாரிகள் நேற்று முடக்கினர்.

Advertisement