ஜெகன்மூர்த்தியை கைது செய்ய சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை
சிறுவன் கடத்தல் வழக்கில், தமிழகத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ., பூவை ஜெகன் மூர்த்தியை கைது செய்ய உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு பகுதியில், காதல் ஜோடி திருமணம் செய்த விவகாரத்தில், 17 வயது சிறுவனை பெண்ணின் தந்தை கடத்தினார். இதில், புதிய பாரதம் கட்சித் தலைவரும், எம்.எல்.ஏ.,வுமான ஜெகன்மூர்த்திக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த விவகாரத்தில், ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ், ஜெகன்மூர்த்திக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், முன்ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெகன்மூர்த்தி மனு தாக்கல் செய்திருந்தார்.
வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஜெகன்மூர்த்தி, போலீசாரின் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டது.
சிறுவன் கடத்தப்பட்டது கூடுதல் டி.ஜி.பி., ஜெயராமின் கார் என்பது தெரிந்ததும், அவரை பணியிடை நீக்கம் செய்ய தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து கூடுதல் டி.ஜி.பி., ஜெயராம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
அதை விசாரித்த உச்ச நீதிமன்றம், வழக்கை சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றியதோடு, ஜெயராமின் பணியிடை நீக்கத்தை ரத்து செய்ய மறுத்து விட்டது.
இந்நிலையில், முன்ஜாமின் கோரி ஜெகன் மூர்த்தி தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்தது.
இதை தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் ஜெகன் மூர்த்தி மேல்முறையீடு செய்தார்.
இந்த மனு, நீதிபதிகள் மனோஜ் மிஸ்ரா, என்.கே.சிங் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஜெகன் மூர்த்தி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராம்சங்கர், “அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஜெகன்மூர்த்தி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
“அவர் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. எனவே அவரை கைது செய்ய தடை விதிக்க வேண்டும்,” என்றார்.
இந்த விவகாரத்தில் தமிழக போலீசார் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், ஜெகன்மூர்த்தியை கைது செய்ய இடைக்கால தடை விதித்ததுடன், சாட்சிகளை கலைப்பது, ஆதாரங்களை அழிப்பது போன்ற செயல்களில் ஈடுபடாமல், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும்படி உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஒத்திவைத்தனர்.
- டில்லி சிறப்பு நிருபர் -
மேலும்
-
திருமணமான 4வது நாளில் பெண் தற்கொலை; வரதட்சணை கொடுமை என புகார்
-
கோவையில் செம்மொழி பூங்கா பணிகள் தாமதம்: தமிழக அரசின் முதன்மை செயலர் நேரில் ஆய்வு
-
மேற்கு மண்டல தபால் துறையில் 9 இடங்களில் ஐ.டி.சி., மையம்
-
100 பில்லியன் டாலர் ஏற்றுமதி இலக்கு சாத்தியமாகும்: மத்திய ஜவுளித்துறை இணையமைச்சர் நம்பிக்கை
-
சுற்றுலா பயணியிடம் லஞ்சம் வாங்கிய புகார் :எஸ்.எஸ்.ஐ., உட்பட இருவர் 'சஸ்பெண்ட்'
-
திருமண ஆசை காட்டி பலாத்காரம்: தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை