தயாரிப்பாளர் சங்கம் - 'பெப்சி' பிரச்னைக்கு தீர்வு காண மத்தியஸ்தர் நியமிக்க ஐகோர்ட் முடிவு

சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்,- 'பெப்சி' இடையேயான பிரச்னைக்கு தீர்வு காண மத்தியஸ்தரை நியமிக்க, சென்னை உயர் நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் என்ற, 'பெப்சி'க்கு எதிராக, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் என்ற புதிய சங்கத்தை துவங்கி உள்ளதாக, பெப்சி குற்றம்சாட்டியது.

இந்நிலையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் தயாரிக்கும் படங்களில், பெப்சி அமைப்பின் உறுப்பினர்கள் பணிபுரிவதை நிறுத்த வேண்டும்; ஒத்துழைப்பு வழங்கக் கூடாது என, தன் உறுப்பினர்களுக்கு, ஏப்ரல் 2ல், பெப்சி கடிதம் அனுப்பியது.

இதன் காரணமாக, படப்பிடிப்பு, படத் தயாரிப்பு பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்த மனு, நீதிபதி கே.குமரேஷ் பாபு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர்.கிருஷ்ணா ரவீந்திரன், ''ஒருவரை ஒருவர் சார்ந்துள்ள நிலையில், பெப்சி உள்ளிட்ட திரைத்துறை சங்கங்களின் ஒத்துழைப்பு இல்லாததால், சினிமா தயாரிப்பு பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன,'' என்றார்.

பெப்சி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜி.மோகன கிருஷ்ணன், ''ஒரு படத்துக்கு நடிகர்களுக்கு, 300 கோடி ரூபாய் வரை ஊதியம் வழங்கப்படுகிறது.

ஆனால், தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு ஒரு நாளைக்கு, 3,000 ரூபாய் கூட தருவதில்லை. வேறு மாநிலத்தவர்களை வேலைக்கு அமர்த்தி, படங்களை முடிக்க திட்டமிட முயற்சிக்கின்றனர்.

தமிழகத்தில் உள்ள தொழில்நுட்ப வல்லுநர்களின் வாழ்வாதாரம் பாதிப்புக்குள்ளாகும்,'' என்றார்.

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, 'பிரச்னையை பேசி தீர்ப்பதற்கு ஏன் மத்தியஸ்தரை நியமிக்கக் கூடாது' என கேள்வி எழுப்பினார். யாரை மத்தியஸ்தராக நியமிக்கலாம் என, இரு தரப்பும் கலந்து ஆலோசித்து, நாளை தெரிவிக்க உத்தரவிட்டார்.

Advertisement