மக்கள் நல திட்டங்களை செயல்படுத்துவதில் வெளிப்படை துணை முதல்வர் பேச்சு

சென்னை : ''எல்லா தரவுகளையும் பொதுவெளியில் வெளியிட்டு வருகிறோம்,'' என துணை முதல்வர் உதயநிதி தெரிவித்தார்.
தமிழ்நாடு பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில், 19வது தேசிய புள்ளியியல் தின விழா, சென்னையில் நேற்று நடந்தது.
துறை சார்பில் நடந்த சிறப்பு ஆய்வறிக்கை சமர்ப்பிக்கும் போட்டியில், மாநில மற்றும் மாவட்ட அளவில் வெற்றி பெற்றவர்களுக்கு, துணை முதல்வர் உதயநிதி சான்றிதழ்களை வழங்கினார்.
மேலும், புள்ளியியல் துறையில் இளங்கலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு, 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் பயிற்சி அளிக்கும் வகையிலான புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டது.
பின், உதயநிதி பேசியதாவது:
கடந்த காலங்களில் புள்ளியியல் துறை குறித்து விழிப்புணர்வு குறைவாக இருந்தது. தற்போது அந்த நிலை மாறியுள்ளது. புள்ளியியல் துறை என்பது, ஒரு நாட்டிற்கோ, நிறுவனத்திற்கோ பயன்படும் என்ற நிலை மாறி, ஒவ்வொரு வீட்டிலும் தேவை என்ற சூழல் உருவாகிஉள்ளது.
தரவுகளை முறையாக பகுப்பாய்வு செய்யும் பழக்கம், தமிழகத்தில் இன்று உருவாகியுள்ளது.
தற்போது நாம் ஏ.ஐ., காலத்தில் வாழ்ந்து வருகிறோம். செயற்கை நுண்ணறிவு மட்டுமின்றி, ஒரு நல்ல அரசுக்கு துல்லியமான தரவுகள் என்பது அவசியம். அவற்றை சேகரிக்கும் துறையாக இத்துறை உள்ளது.
காலை உணவு திட்டம் முதல், அரசு செயல்படுத்தும் திட்டங்களால் ஏற்படும் முன்னேற்றம், தாக்கம் குறித்து, இத்துறை வாயிலாக அறிந்து வருகிறோம்.
விவசாய கூலி விபரங்களில் துவங்கி, மாநிலத்தின் தொழில் வளர்ச்சி குறியீடு வரை இத்துறையின் தரவுகள் தான், அரசுக்கு ஒரு அளவுகோலாக உள்ளது.
அனைத்து தரவுகளையும், புள்ளிவிபரம் மற்றும் ஆதாரத்தோடு வெளிப்படையாக சொல்லி வருகிறோம். அரசு புள்ளிவிபரங்களை பொதுவெளியில் வெளியிட மறுப்பது உண்டு. இதனால், சமூகத்தின் உண்மை நிலை ஆராய்ச்சியாளர்கள், திட்ட வல்லுநர்களுக்கு தெரியாமல் போகும்.
தி.மு.க., அரசை பொறுத்தவரை, எல்லா தரவுகளையும், புள்ளிவிபரங்களையும் நாங்கள் பொதுவெளியில் வெளியிடுகிறோம்.
மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்துவதில் வெளிப்படையாக உள்ளோம். திட்டங்களில் சரிவு இருந்தால் கூட, அதை சரி செய்ய நாங்கள் தயாராக உள்ளோம்.
இவ்வாறு அவர் பேசினார்.





மேலும்
-
விசாரணையில் கைதி உயிரிழந்த விவகாரம்; கைதான போலீசாரின் குடும்பத்தினர் போராட்டம்
-
மூணாறு அருகே ஜீப் கவிழ்ந்து சென்னை சுற்றுலா பயணி பலி
-
பீகாரில் வாக்காளர் பட்டியல் திருத்தம்: 4.96 கோடி பேர் ஆவணங்கள் சமர்ப்பிக்க தேவையில்லை
-
போலீஸ் விசாரணையில் இளைஞர் மரண வழக்கு: சி.பி.ஐ., விசாரணை தேவை: இ.பி.எஸ்., வலியுறுத்தல்
-
ஜூலையில் வெப்பம் அதிகமாக இருக்கும்
-
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 5 பேர் உயிரிழப்பு