கல்லுாரி மாணவி கூட்டு பலாத்காரம் திட்டமிட்டு நடந்ததாக போலீஸ் தகவல்


கொல்கட்டா : மேற்கு வங்கத்தில் சட்டக் கல்லுாரி மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம், முன்கூட்டியே திட்டமிடப்பட்டது என்றும், முக்கிய குற்றவாளி மோனோஜித் மிஸ்ரா அந்த மாணவியை பல நாட்கள் நோட்டமிட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.


இங்கு, தலைநகர் கொல்கட்டாவில், தெற்கு கொல்கட்டா சட்டக் கல்லுாரியில் முதலாம் ஆண்டு படிக்கும் 24 வயது மாணவியை, கல்லுாரியின் முன்னாள் மாணவரும், ஆளும் திரிணமுல் காங்., மாணவர் பிரிவு நிர்வாகியுமான மோனோஜித் மிஸ்ரா, 31, கல்லுாரி மாணவர்கள் ஜைப் அகமது, பிரமித் முகர்ஜி ஆகியோர் உதவியுடன் பலாத்காரம் செய்தார்.



இதை அந்த மாணவர்கள் அருகிலிருந்து பார்த்ததோடு, மொபைல் போனில் வீடியோவும் எடுத்தனர்.


மூன்று பேரும் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கு உடந்தையாக இருந்த கல்லுாரி
காவலாளி பினாகி பானர்ஜியும் கைது செய்யப்பட்டார். மேற்கு வங்கம் முழுதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்து, ஒன்பது பேர் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், சிறப்பு புலனாய்வு குழுவினர் நேற்று கூறியதாவது:



கைதான மோனோஜித் மிஸ்ரா, ஜைப் அகமது, பிரமித் முகர்ஜி ஆகியோர் இதற்கு முன் பல மாணவியரை மிரட்டி பலாத்காரம் செய்து, அதை வீடியோவும் எடுத்துள்ளனர். இச்சம்பவத்தை பொறுத்தவரை, முன்கூட்டியே திட்டமிட்டு மாணவியை அவர்கள் பலாத்காரம் செய்துள்ளனர்.


இந்த கொடூர செயலில் ஈடுபட அவர்கள் பல நாட்களாக சதித்திட்டம் தீட்டி உள்ளனர்.


முக்கிய குற்றவாளியான மோனோஜித் மிஸ்ரா, பாதிக்கப்பட்ட மாணவியை கல்லுாரியில் சேர்ந்த முதல் நாளில் இருந்தே நோட்டமிட்டு வந்துள்ளார். மூன்று பேரின் மொபைல் போன்களையும் பறிமுதல் செய்துள்ளோம்.



@twitter@https://x.com/dinamalarweb/status/1939925127300354122twitter

அவற்றிலுள்ள வீடியோக்களை ஆய்வு செய்து வருகிறோம். மேலும் இது தொடர்பாக, 25க்கும் மேற்பட்ட மாணவர்களிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதற்கிடையே, சட்டக் கல்லுாரி மாணவி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கை சி.பி.ஐ.,யிடம் ஒப்படைக்கக் கோரி, கொல்கட்டா உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

Advertisement