பயங்கரவாதிகள் ஊடுருவ உதவிய பாக்., நபர் கைது

ஜம்மு: ஜம்மு - காஷ்மீரின் பூஞ்ச் - ரஜோரி மாவட்டங்களில் உள்ள எல்லை கட்டுப்பாடு கோடு வழியாக, நம் அண்டை நாடான பாகிஸ்தானில் இருந்து சிலர் ஊடுருவ முயன்றனர். இதில், நம் நாட்டுக்குள் நுழைந்த ஒருவரை ராணுவத்தினர் கைது செய்தனர். அவரை பின்தொடர்ந்து வந்தவர்கள், மீண்டும் பாகிஸ்தானுக்கே ஓடி விட்டனர்.

இது குறித்து ராணுவத்தினர் கூறியதாவது:

கைது செய்யப்பட்ட நபர், பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரைச் சேர்ந்த முகமது ஆரிப் என்பது தெரிய வந்துள்ளது. இவரை பின்தொடர்ந்து, ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பின் நான்கு பயங்கரவாதிகள் வந்தனர்.

முகமது ஆரிப் பிடிபட்ட வுடன், செங்குத்தான பாறைகளில் குதித்து படுகாயங்களுடன், நான்கு பயங்கரவாதிகளும் மீண்டும் பாகிஸ்தானுக்கே தப்பி ஓடி விட்டனர்.

அருகே பாக்., ராணுவத்தினர் இருந்ததால், எங்களால் தாக்குதல் நடத்த முடியவில்லை. விசாரணையில், பயங்கரவாதிகளுக்கு வழிகாட்டியாக முகமது ஆரிப் இருந்ததும், பாக்., ராணுவத்தின் உத்தரவுப்படி பயங்கரவாதிகள் ஊடுருவ அவர் உதவியதும் தெரியவந்துள்ளது. அவரிடம் தொடர் விசாரணை நடக்கிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement