பெரியாறு அணையில் 2வது நாளாக கேரளாவுக்கு உபரி நீர் வெளியேற்றம்

1

கூடலுார்: முல்லைப் பெரியாறு அணையில் இருந்து 136 அடிக்கு மேல் தேங்கிய உபரி நீர் கேரளாவுக்கு நேற்று 2வது நாளாக வெளியேற்றப்பட்டது. தொடர்ந்து பெய்த மழை குறைந்தது.


தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பெரியாறு அணை நீர்ப் பிடிப்பு பகுதியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து கனமழை பெய்து வந்தது. இதனால் ஜூன் 28 இரவு 10:00 மணிக்கு 136 அடியை எட்டியது. ரூல்கர்வ் விதிமுறைப்படி ஜூன் 29ல் 136 அடிக்கு மேல் தேங்கிய உபரி நீரான 250 கன அடியை அணையை ஒட்டியுள்ள 13 ஷட்டர்களில் இருந்து கேரளாவுக்கு வெளியேற்றப்பட்டது.



நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி அணை நீர்மட்டம் 136.4 அடியாக இருந்தது (மொத்த உயரம் 152 அடி). 2வது நாளாக நேற்று உபரி நீரான 363 கன அடியை 13 ஷட்டர்கள் மூலம் கேரளாவுக்கு வெளியேற்றப்பட்டது.


தமிழகப் பகுதிக்கு முதல் போக நெல் சாகுபடி மற்றும் குடிநீருக்காக 2117 கன அடி திறக்கப்பட்டுள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3020 கன அடியாக இருந்தது. நீர் இருப்பு 6218 மில்லியன் கன அடியாகும். நீர்ப்பிடிப்பு பகுதியில் நேற்று மழை பதிவாகவில்லை. மழை குறைந்து நீர் வரத்து குறையும் போது கேரள பகுதிக்கு வெளியேற்றப்படும் தண்ணீர் நிறுத்தப்படும்.


அணைப்பகுதியில் தொடர்ந்து கண்காணிப்பு பணிக்காக அணை செயற்பொறியாளர் செல்வம், உதவி செயற்பொறியாளர் குமார், உதவி பொறியாளர்கள் மகேந்திரன், முகமது உவைஸ், ராஜகோபால் உள்ளிட்ட தமிழக பொறியாளர்கள் முகாமிட்டுள்ளனர்.

Advertisement