'பங்கர் பஸ்டர்' ஏவுகணை தயாரிக்கும் இந்தியா; அக்னி - 5யின் புதிய பதிப்பு உருவாகிறது

ஈரானின் அணுசக்தி வளாகமான, போர்டோ மீது , 'பங்கர் பஸ்டர்' வெடிகுண்டுகளை வீசி அமெரிக்கா தாக்குதல் நடத்திய நிலையில், அதை விட அதிகமான வெடிகுண்டுகளை சுமக்கும் பங்கர் பஸ்டர் ஏவுகணைகளை உள்நாட்டில் தயாரிக்க, நம் நாடு முடிவு செய்துள்ளது.


புதுடில்லி: மேற்காசிய நாடான இஸ்ரேல் - ஈரான் இடையே, சில நாட்களுக்கு முன் மோதல் நீடித்தது. இரு தரப்பும் மாறி மாறி வான்வழி தாக்குதலில் ஈடுபட்டதால், அப்பிராந்தியத்தில் பதற்றம் நிலவியது.



இஸ்ரேலுக்கு ஆதரவாக களத்தில் குதித்த அமெரிக்கா, ஈரானின் மூன்று அணுசக்தி வளாகங்களை குறிவைத்து தாக்கியது. போர்டோ அணுசக்தி வளாகத்தை தாக்க, பங்கர் பஸ்டர் வெடிகுண்டுகளை அமெரிக்கா பயன்படுத்தியது.


இதனால் கடுப்பான ஈரான், கத்தாரில் உள்ள அமெரிக்க விமானப்படை தளத்தை தாக்கியது. உலக நாடுகள் வலியுறுத்தியதை அடுத்து, ஈரான் - இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் அமலானது.

சவால்



உலக நாடுகளிடையே சமீபத்தில் நடந்த மோதல்களில் இருந்து ஒரு விஷயத்தை புரிந்து கொண்ட நம் நாடு, எதிர் கால போர்களுக்கு தயாராகும் வகையில், வலுவூட்டப்பட்ட நிலத்தடி இலக்குகளில் ஊடுருவக்கூடிய சக்தி வாய்ந்த புதிய ஏவுகணை அமைப்பை உருவாக்கும் பணியை துரிதப்படுத்தி உள்ளது.



டி.ஆர்.டி.ஓ., எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகம், கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி- - 5 ஏவுகணையின் புதிய பதிப்பை உருவாக்கி வருகிறது. தற்போதுள்ள அக்னி - 5 ஏவுகணை, அணு ஆயுதங்களை சுமந்து, 5,000 கிலோ மீட்டருக்கும் அதிகமான இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும்.


ஆனால், தற்போது உருவாகும் அக்னி - 5 பங்கர் பஸ்டர் ஏவுகணை, 2,500 கி.மீ., துாரம் வரை சென்றாலும், 7,500 கிலோ கிராம் எடையுள்ள வெடிகுண்டுகளை சுமந்துச் செல்லும் திறனுடையது.


வலுவூட்டப்பட்ட கான்கிரீட் அடுக்குகளுக்கு அடியில் புதைந்துள்ள எதிரி நாடுகளின் அணுசக்தி வளாகங்களை தாக்கும் வகையில், இந்த ஏவுகணை வடிவமைக்கப்பட உள்ளது. வெடிப்பதற்கு முன், 260 - 330 அடி வரை நிலத்தடியில் ஊடுருவும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


ஈரானின் அணுசக்தி நிலையங்களை தகர்க்க, பங்கர் பஸ்டர் வெடிகுண்டுகளை பயன்படுத்தி அமெரிக்கா வலிமையை காட்டிய நிலையில், அதற்கு சவாலாகவும், அதை விட மேம்பட்டதாகவும் பங்கர் பஸ்டர் ஏவுகணையை உருவாக்க நம் நாடு முடிவு செய்து, அதற்கான பணிகளை முடுக்கி விட்டுள்ளது.

8 டன் எடை



பங்கர் பஸ்டர் வெடிகுண்டுகளை சுமந்துச் செல்ல, விலை உயர்ந்த குண்டுவீச்சு விமானங்களை அமெரிக்கா பயன்படுத்தி வருகிறது. ஆனால் நம் நாடோ, குறைந்த செலவில் தரையில் இருந்து ஏவும் வகையில் வடிவமைத்து வருகிறது.



அக்னி - 5 பங்கர் பஸ்டர் ஏவுகணை, இரு வகைகளில் உருவாகிறது. ஒன்று, தரைக்கு மேலே உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும்; மற்றொன்று, கடினமான நிலத்தடி உட்கட்டமைப்பில் துளையிடும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஏவுகணையும் 8 டன் வரை எடையுள்ளதாக இருக்கும். இது உலகளவில் மிகவும் சக்திவாய்ந்ததாக இருக்கும்.


கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி- - 5 உடன் ஒப்பிடும் போது, புதிய வகை ஏவுகணை செல்லும் துாரம் குறைவாக இருந்தாலும், வெடிகுண்டுகளின் எடை மிக அதிகமாக இருக்கும்.

பாக்., - சீனா போன்ற எதிரி நாடுகளில் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள், ஏவுகணை குழிகள் மற்றும் முக்கியமான ராணுவ உட்கட்டமைப்புகளை குறிவைப்பதற்கு, இந்த பங்கர் பஸ்டர் ஏவுகணை முக்கியமானதாக இருக்கும்.



அமெரிக்காவின் பங்கர் பஸ்டர் வெடிகுண்டு அமைப்பு போல தோன்றினாலும், அதை விட இந்த ஏவுகணை மிகவும் மேம்பட்டது. இந்த வகை ஏவுகணையை உள்நாட்டிலேயே உருவாக்கி பயன்படுத்துவதற்கான நம் நாட்டின் உந்துதல், வளர்ந்து வரும் ராணுவ திறன்களையும், பாதுகாப்பு தொழில்நுட்பத்தில் தன்னம்பிக்கைக்கான உறுதிப்பாட்டையும் காட்டுகிறது.

Advertisement