6 எம்.எல்.ஏ.,க்களுடன் ஆட்சியில் இருப்பது தான் பா.ஜ., வளர்ச்சி மாஜி தலைவர் செல்வகணபதி

புதுச்சேரி : புதுச்சேரியில், 6 எம்.எல்.ஏ.,க்களுடன் ஆட்சியில் இருப்பது தான் பா.ஜ., வளர்ச்சி என, பா.ஜ., தலைவர் ராமலிங்கம் பதவியேற்பு விழாவில், முன்னாள் தலைவர் செல்வகணபதி பேசினார்.

செல்வகணபதி எம்.பி., பேசியதாவது:

புதுச்சேரி பா.ஜ., தலைவராக ராமலிங்கம் புதியதாக பொறுபேற்று கொண்டார். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். நான் விட்டு சென்ற பணியை, என்னை விட சிறப்பாக செய்யும் நபர் ராமலிங்கம் தான். நான் தலைவராக அறிவிக்கப்பட்டவன், அவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டர்.

வரும் 2026ம் ஆண்டு நமக்காக காத்து கொண்டிருக்கிறது. நான் 1989ம் ஆண்டு, புதுச்சேரியில் கல்வி நிறுவனத்தை நிறுவிய போது, எனக்கு ஆர்.எஸ்.எஸ்., மூலம் அறிமுகம் கிடைத்தது. என்னை வளர்த்தது, நான் வளர்ந்தது சங்கம் சொல்லி கொடுத்த கட்டுபாடுகள் தான்.

கடந்த 2006ம் ஆண்டு, நடந்த சட்டசபை தேர்தலில், லாஸ்பேட்டை தொகுதியில் பா.ஜ., வில் நின்று அதிக வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்தவர் கல்யாணம் சுந்தம் எம்.எல்.ஏ., இவரை தொடர்ந்து, 2009ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில், லலிதா குமாரமங்கலம், பா.ஜ.,வில் போட்டியிட்டு இரண்டாம் இடத்தை பிடித்தார். இப்படி தான் பா.ஜ., வளர்ந்தது.

பா.ஜ.,வில் நியமன எம்.எல்.ஏ.,க்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு, சட்டசபை உள்ளே வரமுடியும். மக்களால் தேர்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.,வாக வரமுடியாது என கிண்டல் செய்தனர். அதன் பின் நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., சார்பில் 6 எம்.எல்.ஏ.,க்கள் வெற்றிபெற்று, சட்டசபையில் நுழைந்து ஆட்சியில் பங்கு வகித்துள்ளோம். இது தான் பா.ஜ., வளர்ச்சியாக உள்ளது. உலகளவில் நான்காவது இடத்திற்கு இந்தியா இருக்கின்றது என்றால், அதற்கு பிரதமர் மோடி தான் காரணம்.

இவ்வாறு அவர் பேசினர்.

Advertisement