திருத்தம் செய்த பின் 15 நாளில் வாக்காளர் அடையாள அட்டை பெறலாம்: கலெக்டர்  

கடலுார் : வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்த பின் 15 நாட்களுக்குள் அடையாள அட்டையை பெறலாம் என கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

அவரது செய்திக்குறிப்பு:

வாக்காளர்களுக்கு புகைப்பட அடையாள விரைவாக வழங்க வேண்டும் என்பதற்காக, இந்தியத் தேர்தல் ஆணையம் புதிய செயல்முறை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்தகவலின் அடிப்படையில், புதிய வாக்காளர் சேர்க்கை அல்லது ஏற்கனவே உள்ள வாக்காளர் விவரங்களில் மாற்றம் செய்யப்படும் போது, வாக்காளர் பட்டியலில் அந்தத் திருத்தம் செய்யப்பட்ட 15 நாட்களுக்குள் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வழங்கப்படும்.

இந்த முயற்சி, வாக்காளர்களின் நலனுக்காக மேற்கொள்ளப்படும் பல நடவடிக்கைகளில் ஒன்றாகும். புதிய முறையில், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை, செயலாக்கம் முதல் தபால் துறையின் மூலமாக வாக்காளரிடம் வழங்கப்படும் வரை ஒவ்வொரு கட்டமும் நேரடியாக கண்காணிக்கும் வகையில் இருக்கும்.

வாக்காளர்கள் ஒவ்வொரு கட்டத்திலும் குறுஞ்செய்தி வாயிலாக தகவல்களை பெறுவார்கள். இந்த நோக்கில், தேர்தல் ஆணையம் புதிதாக அறிமுகத்திய இணையதளத்தில் ஒரு தனிப்பட்ட ஐ.டி., உருவாக்கியுள்ளது.

வாக்காளர்களுக்கு வேகமான மற்றும் செயல் திறனுள்ள தேர்தல் சேவைகளை வழங்குவதே இந்திய தேர்தல் ஆணையத்தின் நோக்கமாகும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement