மாற்றுத்திறனாளிகள் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம்

விழுப்புரம் : கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி தர்ணாவில் ஈடுபட்டனர்.

சிகரம் மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் நேற்று காலை கலெக்டர் அலுவலகம் முன்பு திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர். மாற்றுத்திறனாளிகள் கூறியதாவது;

விக்கிரவாண்டி தாலுகா கொட்டியாம்பூண்டி கிராமத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. அங்கு கடந்த 16ம் தேதி அளவீடு செய்ய சென்ற அதிகாரிகளை ஊராட்சி தலைவர், கிராம மக்களை திரட்டி தடுத்தார். கடந்த 28 ம் தேதி போலீஸ் பாதுகாப்புடன் அளவீடு செய்ய சென்றபோதும், மக்களை திரட்டி நெருக்கடி கொடுத்தனர். இடம் தேர்வு செய்யப்பட்டாலும் அது வசிப்பதற்கு ஏற்ற இடம் இல்லை என்பதால் கைவிடப்பட்டது.

பொன்னங்குப்பம் மாற்றுத்திறனாளி பெரியசாமி வீட்டிற்கு செல்லும் பொதுவழிப்பாதை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். அதனை அகற்ற மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. சிறுவாலை, உலகலாம்பூண்டி கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வழங்கும் இலவச வீட்டுமனை பட்டாவுக்கு இடம் ஆய்வு செய்யாமல் கிடப்பில ்உள்ளது என தெரிவித்தனர்.

போலீசார் சமாதானபடுத்தியும், கலைந்துசெல்லாமல் போராட்டத்தை தொடர்ந்தனர். ஆர்.டி.ஓ., முருகேசன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதனை ஏற்காமல் மதியம் 2.30 மணி வரை போராட்டத்தில் ஈடுபட்டு, கலெக்டரிடம் மனு அளித்து சென்றனர்.

Advertisement