டாஸ்மாக்கில் மாமூல் வசூலித்த ஏட்டு வீடியோ; வைரலால் ஆயுதப்படைக்கு மாற்றம்

திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுாரில் டாஸ்மாக் மதுபான கடையில் சீருடையில் சென்று மாமூல் வசூலித்த ஏட்டு வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானதால், ஏட்டுவை ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்.பி., உத்தரவிட்டார்.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் பேரூராட்சி பகுதியில் அரசு டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு, சீருடையில் வந்த திருவெண்ணெய்நல்லுார் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் தலைமை காவலர் பரந்தாமனிடம், சேல்ஸ்மேன் ஒருவர் கதவை திறந்து வெளியே வந்து பணத்தை சுருட்டி கொடுத்து விட்டு மீண்டும் கடைக்கு செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்கில் வைரலாக பரவியது.

இது திருவெண்ணெய்நல்லுார் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏட்டு பரந்தாமன் அரகண்டநல்லுார் போலீஸ் நிலையத்திலிருந்து திருவெண்ணெய்நல்லுார் போலீஸ் நிலையத்திற்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு தான் பணி மாற்றமாகி வந்தார் என்பது குறிப்பிடதக்கது.

ஏட்டு பரந்தாமன் பணம் வாங்கி செல்லும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகியதால், விழுப்புரம் எஸ்.பி., சரவணன், மாமூல் வசூலித்த ஏட்டு பரந்தாமனை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார். இது தொடர்பாக துறை ரீதியான விசாரணையும் நடந்து வருகிறது.

Advertisement