சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை : வாலிபருக்கு 10 ஆண்டு சிறை

கோவை:
சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

கோவை, குனியமுத்துார் பகுதியை சேர்ந்தவர் ஆஷிக் அலி,26; பள்ளியில் படிக்கும் 13 மற்றும் 16 வயது சிறுவர்களுக்கு, மொபைல் போனில் ஆபாச வீடியோ காட்டி பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். இதை, பள்ளியில் நடந்த பாலியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றில், சிறுவர்கள் புகார் அளித்தனர். சிறுவர்கள் தெரிவித்த தகவல், பள்ளி நிர்வாகம் வாயிலாக பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, சிறுவர்களின் பெற்றோர்கள் கோவை தெற்கு அனைத்து மகளிர் போலீசில் 2021, டிச., 21 ல் புகார் அளித்தனர். புகாரின் பேரில், ஆஷிக் அலியை கைது செய்து சிறையிலடைத்தனர்.

அவர் மீது, கோவை முதன்மை போக்சோ சிறப்பு கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தனர். விசாரித்த நீதிபதி பகவதியம்மாள், குற்றம் சாட்டப்பட்ட ஆஷிக் அலிக்கு, 10 ஆண்டு சிறை,10,000 ரூபாய் அபராதம் விதித்து, நேற்று தீர்ப்பளித்தார்.

Advertisement