தொழிற்சாலை பாதுகாப்பு சட்டங்கள் கடுமையாக்க வேண்டும்: சீமான் வலியுறுத்தல்

சென்னை:தொழிற்சாலை பாதுகாப்பு சட்டங்களைக் கடுமையாக்கி,விலைமதிக்க முடியாத தொழிலாளர்களின் உயிரைப் பாதுகாக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார்.

அவரது அறிக்கை:

தெலுங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டத்தில் அமைந்துள்ள பசமைலாரம் தொழிற்பேட்டையில் இயங்கிவரும் வேதிப்பொருள் தொழிற்சாலையில் நிகழ்ந்த வெடிவிபத்தில் 37 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 35 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் படுகாயமடைந்துள்ள கொடுந்துயர செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.

மாநில அரசுகளும், மத்திய அரசும் அவ்வப்போது தொழிற்சாலைகளில் முறையான ஆய்வு மேற்கொண்டு தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான சூழல் உள்ளதை உறுதி செய்ய வேண்டும். ஒவ்வொரு முறையும் விபத்து நிகழ்ந்து பல தொழிலாளர்கள் தங்கள் இன்னுயிரை இழந்து, அவர்களின் குடும்பத்தினர் நிற்கதியாய் நின்றபிறகு அவசர அவசரமாய் ஒப்புக்கு ஆய்வு மேற்கொள்வதினாலோ, தொழிற்சாலை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுப்பதினாலோ, மரணித்த ஒரு தொழிலாளர் உயிரைக்கூட மீட்டுத்தர முடியாது.

ஆகவே, தொழிற்சாலை பாதுகாப்பு சட்டங்களைக் கடுமையாக்கி, விதிமுறைகள் சரியாகக் கடைப்பிடிக்கப்படுவதைத் தொடர்ச்சியாக ஆய்வு செய்வதை மத்திய - மாநில அரசுகள் உறுதிப்படுத்துவதின் மூலம் விபத்தினைத் தவிர்த்து, விலைமதிக்க முடியாத தொழிலாளர்களின் உயிரைப் பாதுகாக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆறுதலைச்சொல்லி, துயரில் பங்கெடுக்கின்றேன்.

படுகாயமடைந்தவர்கள் விரைந்து நலம்பெற வேண்டுகிறேன்.

இவ்வாறு சீமான் அறிக்கையில் கூறியுள்ளார்.

Advertisement