'மே.வங்கத்தின் மகளிருக்கு நீதி' பிரசாரத்தை கையிலெடுக்கும் பா.ஜ.,

2


முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கும் மேற்கு வங்கத்தில், அடுத்த ஆண்டு ஏப்ரல் - மே மாதங்களில் தேர்தல் நடக்கிறது.


'ஹாட்ரிக்' வெற்றி பெற்று, தொடர்ந்து 15 ஆண்டுகளாக முதல்வர் அரியணையில் இருக்கும் மம்தா பானர்ஜி, நான்காவது வெற்றியை எதிர்பார்த்துள்ளார்.



இந்த முறை ஆட்சி அதிகாரத்தில் இருந்து திரிணமுல் காங்கிரசை விரட்டியடிக்க வேண்டும் என்ற முனைப்பில் எதிர்க்கட்சியான பா.ஜ.,வும் தீவிரமாக பணியாற்றி வருகிறது.

வார்த்தை மோதல்



சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் உள்ள நிலையில், மேற்கு வங்கத்தில் தற்போதே பிரசாரம் சூடுபிடித்துள்ளது.


இந்த நேரத்தில் தான், கொல்கட்டாவில் உள்ள தெற்கு கொல்கட்டா சட்டக் கல்லுாரியில் படிக்கும் முதலாமாண்டு மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நடந்தது.


இது, ஆளும் திரிணமுல் காங்., அரசு மீது மக்களுக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.



இந்த வழக்கில், அக்கட்சியின் மாணவர் பிரிவு நிர்வாகி மோனோஜித் மிஸ்ரா உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.


கடந்த ஆண்டு ஆகஸ்டில், ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில், பயிற்சி பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது, சட்டக் கல்லுாரி மாணவி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


இது, முதல்வர் மம்தா பானர்ஜி ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளது.


இந்நிலையில், 'மேற்கு வங்கத்தின் மகளிருக்கு நீதி' என்ற பிரசாரத்தை எதிர்க்கட்சியான பா.ஜ., முன்னெடுத்துள்ளது.


சட்டக் கல்லுாரி மாணவி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்துக்கு நீதி கேட்டு, அக்கட்சியின் மூத்த தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான சுவேந்து அதிகாரி தலைமையில், கொல்கட்டா முழுதும் சமீபத்தில் போராட்டம் நடந்தது.

பின்னடைவு



ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லுாரியின் பயிற்சி பெண் டாக்டர் பலாத்கார கொலை சம்பவத்தில், அரசியல் கட்சிகள் தலையிட வேண்டாம் என மக்கள் குரல் கொடுத்தனர்.



ஆனால் இந்த விவகாரத்தில், பா.ஜ.,வின் போராட்டத்தில் அவர்கள் பங்கெடுத்துள்ளனர். இது, திரிணமுல் காங்கிரசுக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.


மேற்கு வங்கத்தின் மகளிருக்கு நீதி என்ற பிரசாரத்தை முன்னிறுத்தியே, அடுத்தாண்டு சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளவும் பா.ஜ., மேலிடம் முடிவு செய்துள்ளது.


இதை, முதல்வர் மம்தா பானர்ஜி எப்படி எதிர்கொள்ளப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.



- நமது சிறப்பு நிருபர் -

Advertisement