டில்லியில் முதல் நாளிலேயே 24 பழைய வாகனங்கள் பறிமுதல்

3


டில்லியில், காற்று மாசை கட்டுப்படுத்த, 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைய வாகனங்களை அரசு தடை செய்துள்ள நிலையில், அவற்றை இயக்கிய, 24 பேரின் வாகனங்கள் நேற்று பறிமுதல் செய்யப்பட்டன.


தலைநகர் டில்லியில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான பனிக்காலத்தில் காற்றின் தரக் குறியீடு 1,000 என்ற மோசமான நிலையை எட்டுகிறது.



இதனால் குழந்தைகள், முதியோர், நுரையீரல் பாதிப்பு உடையோர் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.


பழைய வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை மற்றும் அண்டை மாநிலங்களான ஹரியானா, பஞ்சாபில் எரிக்கப்படும் விவசாய கழிவுகள் டில்லியில் காற்று மாசு ஏற்பட முக்கிய காரணங்கள் என்று கூறப்படுகிறது.


இந்நிலையில், டில்லி மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில், 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பெட்ரோல் மற்றும் 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட டீசல் வாகனங்களை ஜூலை 1 முதல் தடை செய்யவும், அத்தகைய வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பக்கூடாது எனவும் காற்று தர மேலாண்மை கமிஷன் உத்தரவிட்டது.


இந்த உத்தரவால் டில்லியில், 62 லட்சம் வாகனங்கள் பாதிப்புக்குள்ளாகும். இருப்பினும் டில்லி அரசு நேற்று முதல் இந்த உத்தரவை அமல்படுத்தியது.


பழைய வாகனங்களை கண்டறிந்து கைப்பற்ற டில்லி போலீஸ், போக்குவரத்து போலீஸ், போக்குவரத்து துறை அதிகாரிகள், டில்லி மாநகராட்சி அதிகாரிகள் அடங்கிய பிரத்யேக குழு அமைக்கப்பட்டுள்ளது.


இவர்கள் டில்லி முழுதும், 500 பெட்ரோல் பங்குகளில் நேற்று கண்காணிப்பில் ஈடுபட்டனர். அங்கு, வாகனங்களின் நம்பர் பிளேட்டை வைத்து அது எந்த ஆண்டு தயாரிப்பு என்பதை கண்டறியும் கருவியும் பொருத்தப்பட்டது.


இதில், நேற்று மட்டும், 24 வாகனங்கள் சிக்கின. அதில், 19 இரு சக்கர வாகனங்கள், ஒரு மூன்று சக்கர வாகனம், கார்கள், லாரிகள் அடக்கம்.


அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், நான்கு சக்கர வாகன ஓட்டிளுக்கு, 10,000
ரூபாயும், இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு 5,000 ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டது.


டில்லிக்கு வரும் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள், உ.பி., ஹரியானா போன்ற அண்டை மாநிலங்களில் இருந்து தான் வருகின்றன. இந்த புதிய உத்தரவால், பெரும்பாலான சரக்கு வாகனங்கள் டில்லிக்குள் வராமல் சரக்குகளை எல்லைக்கு வெளியே இறக்கிவிட்டு சென்றன.


இதனால் வரும் நாட்களில் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் வினியோகம் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.


இது போன்ற தடை, தேசிய தலைநகர் பகுதிகளான குருகிராம், பரிதாபாத், காஜியாபாத், நொய்டா மற்றும் சோனிப்பட்டில் அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் அமலுக்கு வருகிறது.



-- நமது சிறப்பு நிருபர் -

Advertisement