பதிலடி கொடுக்குமா இந்தியா * இரண்டாவது டெஸ்ட் ஆரம்பம்

பர்மிங்ஹாம்: இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியை தேர்வு செய்வதில் குழப்பம் காணப்படுகிறது. தரமான 'லெவன்' அணியை உறுதி செய்தால், இங்கிலாந்துக்கு சரியான பதிலடி கொடுக்கலாம்.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (ஆண்டர்சன்-சச்சின் டிராபி) பங்கேற்கிறது. லீட்சில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா தோல்வியடைந்தது.
சோக வரலாறு
இரண்டாவது டெஸ்ட் இன்று பர்மிங்ஹாமில் உள்ள எழில்மிகு எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் துவங்குகிறது. இங்கு 2022ல் நடந்த டெஸ்டில் இந்தியாவுக்கு எதிராக 76.4 ஓவரில் 378/3 ரன்னை 'சேஸ்' செய்து இங்கிலாந்து வென்றது. கடந்த லீட்ஸ் டெஸ்டிலும் 'பாஸ் பால்' முறையில் அதிரடியாக ஆடிய இங்கிலாந்து, 82 ஓவரில் 373/5 ரன்னை 'சேஸ்' செய்து வெற்றி பெற்றது.
ஜடேஜா பலவீனம்
இப்போட்டியில் 'ஸ்பெஷலிஸ்ட் ஸ்பின்னர்' இல்லாத குறை நன்கு தெரிந்தது. ரவிந்திர ஜடேஜாவின் 'சுழல்' எடுபடவில்லை. முதல் இன்னிங்சில் 23 ஓவரில் 0/68, 2வது இன்னிங்சில் 24 ஓவரில் 1/104 என ஏமாற்றினார். பிஷன் சிங் பேடி, மணிந்தர் சிங் போல பந்தின் வேகத்தை குறைத்து வீசாதது இவரது பலவீனம். இதை பயன்படுத்தி டக்கெட், 30 முறை 'ரிவர்ஸ் ஸ்வீப்' செய்து சுலபமாக ரன் சேர்த்தார். இங்கிலாந்து மண்ணில் ஜடேஜா 13 டெஸ்டில் 28 விக்கெட் தான் வீழ்த்தியுள்ளார். இதன் காரணமாக எட்ஜ்பாஸ்டன் போட்டியில் மணிக்கட்டு 'ஸ்பின்னர்' குல்தீப் யாதவ் இடம் பெறுவது உறுதி. வாஷிங்டன் சுந்தரும் வாய்ப்பை எதிர்பார்க்கிறார். ஜடேஜாவுக்கு அனுபவம் சாதகம். ஷர்துல் தாகூருக்கு பதில் 'ஆல்-ரவுண்டர்' நிதிஷ் குமார் சேர்க்கப்படலாம். பும்ரா இடம் பெறாத பட்சத்தில், 'வேகத்தில்' சிராஜ், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா மிரட்டலாம்.
நழுவாத கைகள்
லீட்ஸ் டெஸ்டில் சதம் அடித்த 'டாப்-ஆர்டர்' பேட்டர்கள் ராகுல், ஜெய்ஸ்வால், ரிஷாப் பன்ட் (2), கேப்டன் சுப்மன் கில் மீண்டும் ரன் மழை பொழியலாம். சுதர்சன், கருண் நாயர் வாய்ப்பை வீணாக்க கூடாது. 'கேட்ச்' நழுவவிடாமல், கட்டுக்கோப்பாக பந்துவீசினால், இந்திய அணி முதல் வெற்றியை ருசிக்கலாம்.
20 விக்கெட் இலக்கு
இந்திய அணி துணை பயிற்சியாளர் ரியான் டென் டஸ்காட்டே கூறுகையில்,''வலுவான பேட்டிங் உடன் எதிரணியின் 20 விக்கெட்டை வீழ்த்தக்கூடிய பவுலிங் கூட்டணியை கண்டறிய வேண்டும். ஒவ்வொரு பவுலரின் திறமையை தனிப்பட்ட முறையில் மதிப்பீடு செய்கிறோம். சிறந்த அணியை தேர்வு செய்வோம்,''என்றார்.
விளாசல் ஆட்டம்
ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி எந்த இலக்கையும் விரட்டும் உறுதியுடன் காணப்படுகிறது. ஆக்ரோஷமான பேட்டிங் அணிக்கு யானை பலம். டக்கெட், ஹாரி புரூக், ஜோ ரூட், ஜேமி ஸ்மித், 'டெயிலெண்டர்'கள் என அனைவரும் விளாசுகின்றனர். பந்துவீச்சில் ஜோப்ரா ஆர்ச்சர் இடம் பெறாத போதும், ஸ்டோக்ஸ், வோக்ஸ், ஜோஷ் டங், பஷிர் நம்பிக்கை தருகின்றனர்.
யார் ஆதிக்கம்
பர்மிங்ஹாம், எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இந்தியா-இங்கிலாந்து 8 டெஸ்டில் மோதின. இந்தியா 7ல் தோல்வி. ஒரு போட்டி 'டிரா' ஆனது.
* எட்ஜ்பாஸ்டன் ஆடுகளம் பேட்டர்களின் சொர்க்க பூமி. எளிதாக ரன் எடுக்கலாம். துவக்கத்தில் 'வேகம், 3வது நாளில் இருந்து சுழற்பந்துவீச்சு எடுபடும்.
* பர்மிங்ஹாமில் முதல் 3 நாள் வெப்பமான வானிலை காணப்படும். கடைசி 2 நாளில் மழைக்கு வாய்ப்பு உண்டு.
வருவாரா பும்ரா
லீட்ஸ் டெஸ்டின் முதல் இன்னிங்சில் பும்ரா 5 விக்கெட் வீழ்த்தினார். இவரது உடற்தகுதியை கருத்தில் கொண்டு பர்மிங்ஹாம் டெஸ்டில் 'பிரேக்' கொடுக்கப்படலாம். இந்திய கேப்டன் சுப்மன் கில் கூறுகையில்,''பும்ராவின் பணிச்சுமையை குறைப்பது பற்றி பரிசீலித்து வருகிறோம். இவரை தேர்வு செய்வதில் பிரச்னை இல்லை. இன்று காலை ஆடுகளத்தின் தன்மையை பார்த்த பின் 'லெவன்' அணியை முடிவு செய்வோம். ரன்னும் குவிக்க வேண்டும், எதிரணியின் 20 விக்கெட்டையும் வீழ்த்த வேண்டும். இத்தகைய கூட்டணியை தேர்வு செய்வதே இலக்கு,''என்றார்.
ரிஷாப் ரசிகன் நான்...
இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறுகையில்,''பும்ராவை சேர்ப்பதா...வேண்டாமா என்பது இந்தியாவின் பிரச்னை. நான் எதிரணியில் இருந்த போதும், ரிஷாப் பன்ட் ஆட்டத்தை ரசிக்கிறேன். மூன்றுவித கிரிக்கெட்டிலும் அசத்துகிறார். லீட்ஸ் டெஸ்டின் இரு இன்னிங்சிலும் சதம் அடித்தார். ஆபத்தான வீரர்,'' என்றார்.
மேலும்
-
பூட்டிய வீட்டை நோட்டமிட்டு நகை, பணம் திருட்டு
-
பட்டாலியன் போலீஸ்காரர் மர்ம சாவு; செஞ்சி போலீசார் தீவிர விசாரணை
-
நாட்டு துப்பாக்கியுடன் வேட்டைக்கு சென்றவர் கைது
-
லாரி தீப்பிடித்த விபத்தில் காயமடைந்தவர் உயிரிழப்பு
-
திருடுபோனது 8 சவரன்: வழக்கு போட்டது 3 சவரன்; கலெக்டரிடம் பெண் புகாரால் பரபரப்பு
-
சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய ஏட்டு 'சஸ்பெண்ட்'