பட்டாலியன் போலீஸ்காரர் மர்ம சாவு; செஞ்சி போலீசார் தீவிர விசாரணை

செஞ்சி; செஞ்சியில் பட்டாலியன் போலீஸ்காரர் துாக்கில் இறந்து கிடந்தது குறித்து, போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

விழுப்புரம் அடுத்த வி.கொத்தமங்கலத்தை சேர்ந்தவர் ஆனந்தன் மகன் ராமச்சந்திரன், 38; உளுந்துார்பேட்டையில், பட்டாலியன் போலீசாக பணிபுரிந்து வந்தார். செஞ்சியை சேர்ந்த பெனித்தா, 33; என்பவருடன் திருமணம் நடந்து, 3 பெண் குழந்தைகள் உள்ளனர். பெனிதா, செஞ்சி பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். அதனால் செஞ்சியில் வாடகை வீட்டில் தங்கி இருந்தனர்.

கடந்த ஒரு மாதமாக விடுப்பில் இருந்த ராமச்சந்திரன், தனது சொந்த ஊரான வி.கொத்தமங்கலத்தில் தங்கி இருந்தார். இவரை மீண்டும் வேலைக்கு அனுப்புவதற்காக நேற்று முன்தினம் செஞ்சிக்கு அழைத்து வந்தனர்.

நேற்று முன்தினம் இரவு அருகில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு சென்று வருவதாக கூறி விட்டுச் சென்ற ராமச்சந்திரன், வீடு திரும்பவில்லை நேற்று அதிகாலையில் வீட்டின் அருகே உள்ள வேறு ஒருவரின் வீட்டு, முருங்கை மரத்தில் தூக்கில் சடலமாக தொங்கினார்.

அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக, அண்ணன் பாலகிருஷ்ணன், 50; கொடுத்த புகாரின் பேரில் செஞ்சி இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து, பிரேதத்தை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கணவர் உடலை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என, மனைவி பெனிதா கேட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராமச்சந்திரன் உறவினர்கள் செஞ்சி போலீஸ் நிலையம் முன்பு சாலை மறியல் செய்ய முயன்றனர். போலீசார் ராமச்சந்திரனின் அண்ணனிடம் உடலை ஒப்படைப்பதாக கூறியதை ஏற்று, சமாதானமடைந்தனர்.

ராமச்சந்திரன் மரணம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement