உணவு பாதுகாப்புத்துறை அதிகாரியின் உறக்கம் கலையுமா? சுகாதாரமற்ற ஓட்டல்களால் ஆபத்து

திருப்பூர்; உணவு பாதுகாப்புத்துறையின் செயல்பாடுகள் ஏதும் இல்லாததால், திருப்பூர் தொழிலாளர்கள், பாதுகாப்பற்ற உணவை நுகரும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
பனியன் உற்பத்தி நகரான திருப்பூரில், வெளிமாவட்டம், வெளிமாநில தொழிலாளர்கள் லட்சக்கணக்கானோர் பணிபுரிகின்றனர். சில நிறுவனங்கள் மட்டுமே, கேண்டீன் வசதியுடன் இயங்குகின்றன. பெரும்பாலான தொழிலாளர்கள், காலை, இரவு டிபன், மதியம் சாப்பாடு, டீ- காபி அருந்துவதற்கு ஓட்டல்களையே சார்ந்துள்ளனர்.
திருப்பூரில் ஓட்டல்கள், பேக்கரி, தள்ளுவண்டி உணவகங்கள் அதிக எண்ணிக்கையில் செயல்படுகின்றன. இவற்றில், சைவ, அசைவ உணவுகள், பலகாரங்கள் தயாரிக்கப்பட்டு விற்கப்படுகிறது. பெரும்பாலான ஓட்டல், தள்ளுவண்டி கடைகள், உணவு பாதுகாப்புத்துறையின் கெடுபிடியை பொருத்தே விதிமுறைகளை கடைபிடிக்கின்றன. அதிகாரிகளின் பிடி கொஞ்சம் தளர்ந்தாலும், விதிமீறல்கள் அதிகரித்து விடும்.
கடந்த காலங்களில், உணவு பாதுகாப்பு அதிகாரிகள், தொடர் ஆய்வுகள் நடத்தி, உணவு பாதுகாப்பு நெறிமுறைகளை கடைபிடிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்தனர். இந்நிலையில், கடந்த இரண்டு மாதமாக திருப்பூரில் உணவு பாதுகாப்புத்துறையின் செயல்பாடுகள் படுமந்தமாகியுள்ளது. தொடர் ஆய்வுகள் இல்லாததால், ஓட்டல்கள், தள்ளுவண்டி கடைகளில் உணவு பதார்த்தங்களின் தரம் குறைந்துள்ளது.
பல இடங்களில், பலாகரங்கள் தயாரிக்க, பயன்படுத்திய எண்ணெயே மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படுகிறது. பலகாரங்களை சுகாதாரமற்று, ஈ மொய்க்கும் வகையில் திறந்து வைத்து விற்பனை செய்கின்றனர். உணவு தயாரிப்பாளர்கள், பரிமாறுபவர்கள் முறையாக தலைகவசம், கையுறை அணிவதில்லை. சாக்கடை கால்வாய்க்கு அருகில் தள்ளுவண்டி கடை வைத்து உணவு பதார்த்தங்களை விற்பனை செய்கின்றனர்.
அசைவ உணவகங்கள் சில, வழக்கம்போல், மீதமாகும் இறைச்சியை பிரிஜ்-ல் வைத்து பயன்படுத்துவது, அனுமதிக்கப்பட்டதைவிட அதிக சுவையூட்டிகள், நிறமூட்டிகளை பயன்படுத்துகின்றன. துரித உணவகங்கள், தள்ளுவண்டி கடைகளில், சிக்கன் உணவு வகைகளில், அதிகளவில் செயற்கை நிறமி மற்றும் மசாலாக்கள் சேர்க்கப்படுகின்றன.
கட்டுக்கடங்காத 'கேரி கவர்'
பிளாஸ்டிக் கேரி கவர்களில் டீ, காபி கட்டிக் கொடுப்பது. மளிகை, பேக்கரி கடைகளில் ஒருமுறை பயன்படுத்திவிட்டு துாக்கி எறியும் பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு அதிகரித்துவிட்டது. தரமற்ற அசைவ உணவுகள், பலகாரங்களை வாங்கி உண்போர், அஜீரண கோளாறு, வாந்தி போன்ற உடல் உபாதைகளை எதிர்கொள்ள நேரிடுகிறது. கடந்த காலங்களில், போலீசாருக்கு இணையாக, உணவு பாதுகாப்பு அதிகாரிகளும், பெட்டிக்கடை, மளிகை கடைகளில் அதிரடி ஆய்வுகள் நடத்தி, தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
ஆனால், தற்போது குட்கா விற்பனை தொடர்பான ஆய்வுகளும் சரிவர நடைபெறுவதில்லை. மதுக்கடைகளுக்கு அருகிலுள்ள பெட்டிக்கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை ஜோராக நடக்கிறது. உணவே மருந்தாகி, உயர் காக்கும். அதுவே, சுகாதாரமற்ற, கலப்பட உணவுகள், விஷமாகி, உயிரைப்பறித்து விடுகின்றன. தொழிலாளர் மிகுந்த திருப்பூரில், அனைவருக்கும் பாதுகாப்பான, சுகாதாரமான உணவு கிடைப்பதை உறுதி செய்யவேண்டியது, உணவுப்பாதுகாப்பு அதிகாரிகளின் கடமை. விதிமீறும் உணவகங்கள் மீது உணவு பாதுகாப்பு துறையினர் நடவடிக்கை எடுக்க, கலெக்டர் சாட்டையை சுழற்ற வேண்டும்.
கடந்த இரண்டு மாதமாக திருப்பூரில் உணவு பாதுகாப்புத்துறையின் செயல்பாடுகள் எதுவுமில்லை. தொடர் ஆய்வுகள் இல்லாததால், ஓட்டல்கள், தள்ளுவண்டி கடைகளில் உணவு பதார்த்தங்களின் தரம் குறைந்துள்ளது. பாலிதீன் கவர்கள் பயன்பாடு கட்டுக்கடங்காத வகையில் அதிகரித்துள்ளது
மேலும்
-
தி.மு.க., வெற்றிக்கு ம.தி.மு.க., அவசியம்
-
அருள் எம்.எல்.ஏ., மீது பா.ம.க.,வினர் கொந்தளிப்பு
-
குருவாயூர் கோவில் யானைகளுக்கு ஒரு மாத புத்துணர்வு முகாம் துவக்கம்
-
தொழிலாளி கொலை; இருவர் கைது: கள்ளக்காதல் பிரச்னையால் விபரீதம்
-
சிறுமியை கர்ப்பமாக்கி திருமணம் செய்தவருக்கு ஆயுள் தண்டனை; ஊட்டி மகிளா கோர்ட் தீர்ப்பு
-
1,153 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 5,600 கிலோ கஞ்சா கோவையில் எரிப்பு