தொழிலாளி கொலை; இருவர் கைது: கள்ளக்காதல் பிரச்னையால் விபரீதம் 

உடுமலை; உடுமலை அருகே, கள்ளக்காதலியுடன் பேசுவது குறித்த தகராறு காரணமாக, கட்டட தொழிலாளியை வெட்டிக்கொலை செய்த இருவரை, போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே கொங்கல்நகரத்தை சேர்ந்த கட்டட தொழிலாளி, சபரீஸ்வரன், 35; நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டிலேயே வெட்டி கொலை செய்யப்பட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த குடிமங்கலம் போலீசார், 'சிசிடிவி' பதிவுகள் அடிப்படையில் விசாரணையை துவக்கினர்.

விசாரணையில், கள்ளக்காதலியை திருமணம் செய்வதில் ஏற்பட்ட தகராறில், சபரீஸ்வரன் வெட்டிக்கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இந்த வழக்கில், திண்டுக்கல் மாவட்டம், ஆர்.கோம்பை கிராமத்தைச்சேர்ந்த பாலமுருகன், 25, உடுமலை முக்கூடல்ஜல்லிபட்டியை சேர்ந்த ராமமூர்த்தி, 22; நேற்று கைது செய்யப்பட்டனர். இதில், பாலமுருகன், கொங்கல்நகரத்தில் தங்கி, கூலி வேலை பார்த்து வந்துள்ளார்.

போலீசார் கூறியதாவது:

சபரீஸ்வரன் மனைவியை பிரிந்து வாழ்ந்த போது, அப்பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அதே பெண்ணுடன், பாலமுருகனும் பேசி வந்துள்ளார்.

இது குறித்து, சில நாட்களுக்கு முன் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சம்பவம் நடந்த இரவு, சபரீஸ்வரன் வீட்டில் தனியாக துாங்கிக்கொண்டிருந்த போது, நண்பர்களான பாலமுருகனும், ராமமூர்த்தியும், அரிவாளால், அவரை வெட்டி கொன்று விட்டு, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இருவரும் திண்டுக்கல்லுக்கு செல்லும் வழியில் கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு, தெரிவித்தனர்.

இந்த வழக்கில், இருவருக்கும் பிரச்னை ஏற்பட காரணமாக இருந்த பெண்ணிடமும், போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement