போலி சான்றிதழ் கொடுத்து பணி; இருவர் மீது வழக்கு

அரக்கோணம்:தக்கோலத்தில் மத்திய தொழிற்பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில், போலி சான்றிதழ் கொடுத்து பணிக்கு சேர்ந்த இருவர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலத்தில், மத்திய தொழிற்பாதுகாப்பு படை பயிற்சி மையம் உள்ளது. இங்கு, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மத்திய தொழிற்பாதுகாப்பு படையில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, பயிற்சி வழங்கப்படுகிறது.

இங்கு பயிற்சி முடிந்தவுடன், இந்தியாவின் முக்கிய பகுதிகளான அணுமின் நிலையங்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், துறைமுகங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய இடங்களில் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

தற்போது இந்த பயிற்சி மையத்தில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்களது சான்றிதழின் உண்மை தன்மை அறியும் வகையில், அந்தந்த பகுதிகளுக்கு அனுப்பப்பட்டது.

இதில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த நித்திரேஷ்குமார், 22, வர்ஷாகுமார், 19, ஆகியோர் அளித்த இருப்பிட சான்று போலி என தெரியவந்தது.

இது குறித்து சி.ஐ.எஸ்.எப்., பயிற்சி மைய இன்ஸ்பெக்டர் ராகேஷ், தக்கோலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement