புதுப்பாளையம் மேம்பால பணி விரைந்து முடிக்க அறிவுறுத்தல்

ஊத்துக்கோட்டை:புதுப்பாளையம் கிராமத்தில் உள்ள ஆரணி ஆற்றில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணியை, விரைந்து முடிக்க வேண்டும் என, கும்மிடிப்பூண்டி தி.மு.க., - எம்.எல்.ஏ., அறிவுறுத்தினார்.

ஆந்திராவில் உருவாகும் ஆரணி ஆறு, தமிழகத்தில் ஊத்துக்கோட்டை வழியாக பனப்பாக்கம், செங்காத்தாகுளம், பெரியபாளையம், எ.என்.அணைக்கட்டு வழியே பழவேற்காடு கடலில் கலக்கிறது.

இதில், பெரியபாளையம் அருகே ஆரணி ஆற்றை கடந்து புதுப்பாளையம் கிராமத்திற்கு செல்ல வேண்டும். மழைக்காலங்களில் ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போத, கிராம மக்கள் 10 கி.மீ., சுற்றி கொண்டு, பெரியபாளையம் வழியாக செல்ல வேண்டும்.

கடந்தாண்டு புதுப்பாளையம் கிராமத்திற்கு செல்லும் வழியில், ஆரணி ஆற்றில் மேம்பாலம் கட்ட 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 125 மீ., நீளம், 18 மீ., அகலத்தில், 3 மீ., உயரத்தில், மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது.

நேற்று கும்மிடிப்பூண்டி தி.மு.க., - எம்.எல்.ஏ., டி.ஜெ.கோவிந்தராஜன், புதுப்பாளையம் கிராமத்தில் ஆய்வு செய்தார். அப்போது, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் பேசுகையில், 'பாலம் அமைக்கும் பணி தரமாகவும், துரிதமாகவும் முடிக்க வேண்டும்' என அறிவுறுத்தினார்.

Advertisement